மது அருந்திவிட்டு ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள்…. போதையில் ஒரு நண்பனைப் பறிகொடுத்த சோகம்…

23 August 2020, 9:22 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நண்பர்கள் மது அருந்திவிட்டு ஏரியில் குளிக்கச் சென்ற போது போதையில் ஒரு நண்பனைப் பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மண்ணூர் பகுதியில் உள்ள DHL நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரியும் திருப்பத்தூரைச் சேர்ந்த கோபி என்பவர் தன்னுடைய ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர். போதையில் உள்ள நண்பர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்த பொழுது கோபி மட்டும் ஏரியின் நடு பகுதி வரை சென்று குளிக்க முயலும்போது நீரில் மூழ்கி அதிகமான அளவு தண்ணீர் குடித்ததால் மூச்சு திணறி இறந்துவிட்டார்.

உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் பிரேதத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பிரேதத்தை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் குடிகார நண்பர்களின் அட்டூழியத்தால் தங்கள் நண்பனை பறிகொடுத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.