புதிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் முன்வர ஜிப்மர் நிர்வாகம் வேண்டுகோள்

Author: kavin kumar
7 October 2021, 6:31 pm
jipmer UpdateNews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தில் புதிய கோவிட் தடுப்பூசிகளுக்கான மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என ஜிப்மர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தற்போது ஆராய்ச்சியில் உள்ள புதிய கோவிட் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, ஜிப்மரில் புதிதாக ஒரு தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் நிதியுதவி அளிக்கிறது எனவும், புதிய தடுப்பூசிகள் உலகளாவிய வழங்கல் மற்றும் தேவை இடைவெளியை பூர்த்தி செய்ய மட்டுமல்லாமல், அதிக செயல்திறன், குறைவான பக்க விளைவுகள், நீண்ட கால பாதுகாப்பு, ஒரே ஒரு டோஸ், நாசித்துவாரங்களில் தெளிப்பு அல்லது சொட்டு மருந்து போன்ற மாற்று வழிகள், மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பயனுள்ள தடுப்பூசிகள் போன்ற பல மேம்பட்ட அம்சங்களுக்கும் புதிய தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

மேலும், எதிர்காலத்தில் கோவிட் ஏற்படுத்தும் வைரஸின் மரபணு மாற்றங்களைக் கொண்ட புதிய வகைகள் வெளிப்படும் போதும் புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம். எனவே, உலகளவில் புதிய கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், தற்போது 120 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ ஆராய்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. தடுப்பூசிகள் புதிதாக உருவாக்கப்படுவதால், இவை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஜிப்மரில் உள்ள கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவு அத்தகைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ள ஜிப்மர் நிர்வாகம், புதிய தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை விரைவாக நடத்துவதற்கு உதவி செய்ய, ஜிப்மரில் உள்ள கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவு புதிய கோவிட் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்களின் தொடர்பு பட்டியலைத் முன்கூட்டியே தயாரிக்கிறது. அதன்படி ஒவ்வொருவரும் புதிய கோவிட் தடுப்பூசிகள் மீதான சோதனைகளில் சேர முன்வந்து நம் நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் உதவ முன் வர வேண்டும் என ஜிப்மர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Views: - 212

0

0