100 கிலோ ஆமைக்கு ரோலர் போர்டு! எதற்கென தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்!!

15 April 2021, 9:42 pm
Quick Share

காலின் மூட்டில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்ட 100 கிலோ எடை கொண்ட ஆமைக்கு, ரோலர் போர்டு தயார் செய்து கொடுக்கப்பட, அதில் ஆமை ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

23 வயதான ஆண் ஆப்ரிக்க ஆமை ஹெல்முத். 100 கிலோ எடை கொண்ட இந்த ஆமை, சில காரணமாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அதற்கு ஜூம் எர்லெப்னிஸ்வெல்ட் கெல்சென்கிர்ச்சென் விலங்கியல் சாகச உலகில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அதற்கு முன்காலில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலது முன்காலில் அசைவை குறைத்த ஆமை, நடக்க முடியாமல் அவதிப்பட, பிஸியோ தெரபி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூம் எர்லெப்னிஸ்வெல்ட் மிருகக்காட்சி சாலை, தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறது. அதில் அந்த ஆமை, ரோலர் போர்டு உதவியுடன், அரங்குக்குள் சுற்றி வருவது பதிவாகி உள்ளது.

‘ஹெல்முத்துக்கு தோள்பட்டை மூட்டுகளில் பிரச்சினைகள் உள்ளன, குறிப்பாக வலதுபுற தோள்பட்டையில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. டெல்க்டே கால்நடை மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் மூலம் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் சிகிச்சைக்காக, தினமும் ரோலர் போர்டில் நீண்ட நேரம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மருந்துகளும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன’ என மிருகக்காட்சி சாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

‘‘ரோலர் போர்டு சிகிச்சையின் மூலம் அதன் கால்கள் மீண்டும் வலுவடைந்துள்ளன. விரைவில் இன்னும் சிறப்பாக அது செயல்படும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த ஆமை வீடியோ பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 45

0

0