17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கங்காரு ஓவியம் கண்டுபிடிப்பு! ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்

27 February 2021, 8:04 pm
Quick Share

17,300 ஆண்டுகளுக்கு முந்தைய கங்காருவின் பாறை ஓவியம் ஒன்றை ஆஸ்திரேலிய ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுதான் அந்நாட்டில் கிடைத்துள்ள மிகப்பழமையான பாறை ஓவியம் ஆகும். 6.5 அடி நீளம் கொண்ட இந்த பாறை ஓவியத்தை கண்டு, ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஆதிகால ஆதிமனித ஓவியங்களுக்கு புகழ்பெற்ற பகுதியாக, ஆஸ்திரேலியாவிலுள்ள கிம்பர்லி பகுதிய அறியப்படுகிறது. அங்கு பழங்கால ஓவியங்களை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அங்கு பழங்கால பாறை ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தின் அருகில் கிடைத்த, களிமண்ணால் ஆன பழங்கால குளவிக் கூடுகளை கொண்டு, கார்பன் டேட்டிங் எனப்படும் வயது கண்டறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓவியத்தின் வயதை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த சுவர் ஓவியம் வரையப்பட்டு, அதிகபட்சம் 17,500 ஆண்டுகளும், குறைந்தபட்சம் 17,100 ஆண்டுகளும் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாறையில் வரையப்பட்டுள்ள கங்காரு ஓவியம், 6.5 அடி (சுமார் 2 மீட்டர்) நீளம் கொண்டிருக்கிறது. இந்த ஓவியத்தை வரைய, அக்கால மனிதர்கள் ஓச்சரைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இது சிவப்பு நிற மல்பெரி நிறமியை உருவாக்கி இருக்கிறது.

இந்த கங்காரு ஓவியம், தென்கிழக்கு ஆசிய தீவுகளில் கண்டறியப்பட்டுள்ள 40,000 ஆண்டுகளுக்கும் முந்தைய ஓவியங்களை ஒத்து உள்ளதால், இரு பகுதிகளுக்கும் பண்பாட்டுத் தொடர்புகள் ஏதேனும் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 73,000 ஆண்டுகள் பழமையான ஹேஷ்டேக் வடிவிலான ஓவியம் தான், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில், உலகின் பழமையான ஓவியமாக கருதப்படுகிறது.

Views: - 9

0

0