22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் காலடித்தடம்! 4 வயது சிறுமி கண்டுபிடிப்பு

30 January 2021, 3:20 pm
Dinosaur - Updatenews360
Quick Share

பிரிட்டன் கடற்கரையில் 215 மில்லியன் ஆண்டுகள் (22 கோடி ஆண்டுகள்) பழமையான டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை கண்டுபிடித்தது 4 வயது குழந்தை என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

பிரிட்டன் நாட்டில் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரைக்கு பொழுது போக்க சென்றுள்ளனர் ரிச்சர்டு குடும்பத்தினர். தாய் சாலி மற்றும் தந்தை ரிச்சர்டுடன் 4 வயது சிறுமியான லில்லி வில்டர் விளையாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கால்தடத்தை பார்த்து குழந்தை திகைத்து நின்றது. அது டைனோசரின் கால்தடம் தான் என்பதை அந்த குழந்தை அடையாளம் கண்டுள்ளது.

இதனையடுத்து தொல்லியல் ஆய்வாளர்களுக்கு சிறுமியின் தந்தை ரிச்சர்டு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த கால்தடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், 215 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த டைனோசரின் கால்தடம், இத்தனை ஆண்டுகளாக ஈர மண்ணால் அழியாமல் பாதுகாப்பட்டு வந்துள்ளது எனவும், டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை கண்டுபிடிக்க இந்த காலடித்தடம் உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வேல்ஸ் தேசிய அருங்காட்சியக நிபுணர் சிண்டி ஹோவெல்ஸ் என்பவர் கூறியதாவது: இந்த கால்தடம் 10 சென்டி மீட்டர் நீளம் கொண்டிருக்கிறது. 75 சென்டிமீட்டர் உயரமும், 2.5 மீட்டர் நீளமும் கொண்ட டைனோசரின் கால்தடமாக இது இருக்கலாம். ஆனால் இந்த காலடி தடத்துக்கு சொந்தமான டைனோசர் எந்த வகையை சேர்ந்தது என்பதை கூறமுடியவில்லை. இந்த கடற்கரையில் இதுவரை ஏராளமான காலடிதடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும், இந்த சிறுமி கண்டுபிடித்திருக்கும் இந்த காலடி தடம் தான் மிகப்பெரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0