என்ன மனுஷன்யா! உயிரிழந்த யானையின் தும்பிக்கையை பிடித்து கதறிய வனத்துறை அதிகாரி

23 January 2021, 5:54 pm
Quick Share

மசினகுடியில் காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தின் போது, வனத்துறை அதிகாரி ஒருவர் செய்த செயல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யானையின் துதிக்கையை பிடித்து, ‘‘திரும்பி வாடா.. இனி யாருக்கு பழங்கள் கொடுப்பேன் நான்..’’ என அந்த வனத்துறை அதிகாரி அழுதிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனப்பகுதியில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. வனத்துறையினர், பழத்தில் மாத்திரை வைத்து, உட்கொள்ள செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த, 18 ஆம் தேதி, காது அறுந்த நிலையில், சுற்றி வந்த யானையை, மயக்கி ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். காதில் இருந்து மட்டும் 40 லிட்டர் ரத்தம் வெளியேறி இருக்கிறது.

லாரியில் ஏற்றி தெப்பக்காடு செல்லும் வழியில், யானை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் காதில் தீக்காயங்கள் ஏற்படுத்தியவர்கள் குறித்து, வனத்துறை தனிக்குழு விசாரணை நடத்தி வந்தநிலையில், டயரில் தீ வைத்து யானை மீது தூக்கிப்போட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை தேடி வருகின்றனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், லாரியில் யானை இறந்தபோது, வனத்துறை அதிகாரி செய்த நெகிழ்ச்சி செயல், அங்கிருப்பவர்களை கண்ணீர் வர வைத்தது. துதிக்கையை பிடித்துக் கொண்டு அந்த அதிகாரி, ‘‘திரும்பி வாடா.. இனி யாருக்கு நான் பழங்கள் தருவேன்..’’ என அழுதிருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 3

0

0