போலி இறுதிச்சடங்கு செய்து சவப்பெட்டிக்குள் பரிகாரம்! எதற்கு தெரியுமா?

29 January 2021, 7:46 pm
Quick Share

சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தாய்லாந்து மக்கள், போலியாக தங்களுக்கு இறுதி சடங்கு செய்து, சவப்பெட்டிக்கும் பரிகாரம் மேற்கொள்வதை புனிதமாக கருதுகின்றனர். இதனால் தங்களுக்கு வாழ்வில் கஷ்டங்கள் குறையும் என அவர்கள் நம்புகிறார்கள்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின், புறநகரில் உள்ள ஒரு கோவிலில், வினோத சடங்கு ஒன்று நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்பவர்கள், பூங்கொத்தை கையில் பிடித்து, சவப்பெட்டிக்குள் படுத்துக் கொண்டு தங்களை ஒரு துணியால் மூடிக்கொள்கின்றனர். அதனை தொடர்ந்து துறவிகள் மந்திரம் ஓதுகிறார்கள். இந்த வாட் பங்னா நாய் கோவிலில் தினமும் இவ்வாறு 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த சடங்கினை செய்து வருகின்றனர்.

இது அவர்களது வாழ்ககையில் செல்வம் கொழிக்க செய்யும் எனவும், ஒரு புதிய தொடக்கத்தை அளிக்கும் எனவும் அவர்கள் நம்பி இதனை செய்து வருகிறார்கள். சிலர் தொற்று நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இந்த சடங்கை செய்கின்றனர். இதற்காக ஒவ்வொருவரும் 100 பாட் (3.30 அமெரிக்க டாலர்கள்) கட்டணமாக அளிக்கிறார்கள். சவப்பெட்டிக்குள் படுத்துக் கொண்டு அவர்கள் துறவிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்கள்.

சடங்கில் கலந்து கொண்ட நுட்சரங் என்பவர், “நான் மறுபிறவி எடுத்தது போல் உணர்ந்தேன். மீண்டும் உயிரோடு வந்து ஒரு புதிய மனிதனாக ஆனேன்” என்று கூறினார். 23 வயதான சோன்லதித் நிமிமென்வாய், ‘‘தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒருவர் சொன்னதால் தான் கலந்து கொண்டேன்’’ என்று கூறினார். இதேபோல் பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக இந்த சடங்குகளை தினமும் செய்து வருகின்றனர். தற்போது, இதுதொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Views: - 0

0

0