ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ரஹானே செய்த காரியம்! நெட்டிசன்கள் வியப்பு

22 January 2021, 7:36 pm
Quick Share

ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பிய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே, கங்காரு வடிவ கேக்கை வெட்ட மறுத்து, உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 1–2 என இழந்த போதும், டுவென்டி 20 தொடரை 2–1 என கைபற்றியது. இதற்கு பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு சுருண்டு, கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்தது. இதன்பின் குழந்தை பிறப்புக்காக, கேப்டன் கோஹ்லி இந்தியா திரும்பினார்.

இதன்பின் கேப்டன் ரஹானே தலைமையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இந்தியா, 3வது டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. ஆஸ்திரேலியாவின் ராசியான மைதானமான காபாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்காத போதும், நெட் பவுலர்களாக ஆஸ்திரேலியா வந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளடங்கிய இளம் அணியை வைத்துக் கொண்டு, ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கினார் ரஹானே.

இந்த போட்டி ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனின் 100வது போட்டி. அவருக்கு தோல்வியை பரிசளித்த இந்திய வீரர்கள், அவரை கவுரவிக்க முடிவு செய்தனர். வெற்றி கோப்பையை பெறும் முன், இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்ட இந்திய அணியின் டிசர்டை லயனுக்கு வழங்கி கவுரவித்தார். அப்போதே அவரது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பாராட்டப்பட்டது. இந்திய திரும்பிய பின்னும் அதனை காப்பாற்றியுள்ளார் ரஹானா.

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியுடன் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியினர் நேற்று நாடு திரும்பினர். கேப்டன் ரஹானே மும்பையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். இங்கு கிரிக்கெட் பேடுடன், கையில் பேட் வைத்துக் கொண்டிருந்த கங்காரு போன்ற ஸ்பெஷல் கேக்கை அவரது நண்பர்கள் ஆர்டர் செய்து தயாராக வைத்திருந்தனர். இதை ரஹானே வெட்ட மறுத்தார்.

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. தவிர ஆஸ்திரேலிய வீரர்களை ‘தி கங்காருஸ்’ என்று செல்லமாக அழைப்பர். இதையடுத்து கேக் மேலிருந்த கங்காரு அகற்றப்பட்டது. பிறகு ரகானே கேக் வெட்டிக் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரஹானேவும் நெட்டிசன்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

Views: - 5

0

0