தாத்தாவுக்கு செயற்கை விழி; உலக சாதனை படைத்த இஸ்ரேல் டாக்டர்கள்

27 January 2021, 4:21 pm
Quick Share

பார்வை இழந்த முதியவர் ஒருவருக்கு, செயற்கை விழி வெண்படலம் பொருத்தி மீண்டும் பார்வை கிடைக்கச் செய்து அசத்தியிருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு டாக்டர்கள்.

மருத்துவத்துறையில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வருவது இஸ்ரேல். மேற்காசிய நாடான இஸ்ரேலில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, கண் இழந்தவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை வரவழைக்கும் வகையில், புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

அந்நாட்டை சேர்ந்த கார்னீட் விஷன் என்ற அந்த மருத்துவ உபகரணங்களை தயாரித்து வரும் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான, டாக்டர் கிலட் லிட்வின், அழியாத தன்மை கொண்ட, நானோ திசுக்களை வைத்து விழி வெண் படலத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்த செயற்கை விழி வெண் படலத்தை, ஜமால் புரானி என்பவருக்கு பொருத்தியதில், அவருக்கு பார்வை திரும்ப கிடைத்துள்ளது. 78 வயது முதியவரான ஜமாலுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பார்வை பறிபோய் இருக்கிறது. மருத்துவ புரட்சியால், தற்போது மீண்டும் பார்வை கிடைத்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜமால்.

இது குறித்து கிலட் லிட்வின் கூறியது: பல ஆண்டுகள் கடின உழைப்பின் பயனாய் இந்த வெற்றியை அறுவடை செய்திருக்கிறோம். உலகில் உள்ள கோடிக்கணக்கான பார்வையற்றோருக்கு புதிய நம்பிக்கையை இது விதைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புரட்சிகர அறுவை சிகிச்சையின் பின்னணியில் உள்ள டாக்டர்களில் ஒருவரான பேராசிரியர் எரிட் பஹார் கூறுகையில், ‘ஆபரேஷனுக்கு பின், ஜமாலின் கட்டுகளை அகற்றிய தருணம், ஒரு உணர்ச்சிபூர்வமான மற்றும் குறிப்பிடத்தக்க தருணம்’ என்றார்.

Views: - 0

0

0