கொரோனா வார்டில் திருமணம்! காதலன் ஐசியு செல்லும் முன் கரம்பிடித்த காதலி

23 January 2021, 3:36 pm
Quick Share

கொரோனா பாதித்த காதலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐ.சி.யு.வில், காதலன் கோமா நிலைக்கு செல்லும் முன், அவரை காதலி கரம்பிடித்தார். இவர்கள் இருவரும் கொரோனா கிட்டுடன் மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் பகுதியை சேர்ந்த, காதலர்களான எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன் இருவரும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் கொரோனா பாதிப்பு அதிகமாகி ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பித்திருக்கிறது.

இதில் சைமனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, கோமா நிலைக்கு செல்லும் அளவுக்கு சுகவீனம் அடைந்திருக்கிறார். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அவர் மீண்டும் உயிர்பிழைத்து திரும்ப வரும் வரையில் காத்திருக்க விரும்பாத எலிசபெத், அவரை ஐசியு.,வில் வைத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

தனது விருப்பத்தை டாக்டர்களிடம் கூறி ஒப்புதல் பெற்ற எலிசபெத், ஐசியு.வில் கொரோனா கிட் மற்றும் செயற்கை சுவாச கருவிகளுடன், தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி 12ஆம் தேதி இவர்கள் திருமணம் நடந்திருக்கிறது. பின் காதலன் ஐசியு.வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சைக்குப்பின், உடல் நலம் தேறிய இருவரும் தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காதலர்கள் கூறுகையில், ‘‘திருமணத்துக்கு பின் எங்கள் முதல் முத்தத்துக்காக பல நாட்கள் காத்திருந்தோம். மூச்சுவிட சிரமப்பட்ட நாட்களை எங்களால் என்றும் மறக்க முடியாது. எங்கள் காதல் தான் எங்களை ஒன்று சேர்த்திருக்கிறது’’ என கூறினர். இந்த காதல் ஜோடிகளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Views: - 4

0

0