‘அன்பு திருடர்களே..’ என உருகிய மாற்றுத்திறனாளி! உதவி செய்த கேரள முதல்வர்

29 January 2021, 3:54 pm
Quick Share

மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மகனின் பிறந்தநாளுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த சைக்கிள் திருடு போக, அதுகுறித்து பேஸ்புக்கில் கவலையாக பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் கேரளா முழுவதும் வைரலாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் தலையிட்டது மட்டுமன்றி, சிறுவனுக்கு புது சைக்கிள் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள உருளிகுண்ணம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுனீஷ். மாற்றுத்திறனாளியான இவரது கால்கள் மேல் நோக்கி வளைந்திருக்கும். வலது கை முற்றிலும் செயல்படாது. இவரால் உட்காரக்கூட முடியாது. குப்புறப்படுத்து கொண்டே தனது அன்றாட வேலைகளை சுனீஷ் கவனித்து வருகிறது. தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்து, தனது குடும்பத்தை நடத்தி வந்தார். தனது மனைவியுடன் வாழ்ந்து வரும் சுனீஷ்க்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனர். 4ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வர, ஆசை ஆசையாக 5 ஆயிரம் ரூபாய்க்கு, அவருக்கு ஒரு புது சைக்கிள் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சைக்கிள், திருடு போய்விட்டது. இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த சுனீஷ், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவு கேரளா முழுவதும் வைரலாக பரவியது. தனது பதிவில், ‘அன்பு திருடர்களே.. என் மகனின் பிறந்தநாளுக்கு நான் ஆசையாக வாங்கி கொடுத்த சைக்கிளை தயவு செய்து திருப்பி கொடுத்து விடுங்கள்’ என வேதனையுடன் பதிவிட்டார். இந்த போஸ்ட், கேரள முதல்வர் பினராயி விஜயன் வரை செல்லும் அளவுக்கு வைரலானது.

இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்ட பினராயி, கோட்டயம் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு, திருடனை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது மகனை நேரில் சந்தித்து உதவும் படியும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து சுனீஷ் வீட்டுக்கு சென்ற கலெக்டர், புது சைக்கிள் ஒன்றை வாங்கி அந்த சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கலெக்டருக்கும், முதல்வருக்கும் தனது நன்றியை சுனீஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட சுனீஷ், ‘என் பேஸ்புக் பதிவை பார்த்து நிறைய பேர் புது சைக்கிள் வாங்கி தர முன்வந்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியே பரவ, நெட்டிசன்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் கேரள முதல்வர்.

Views: - 0

0

0