‘வாத்தி கம்மிங் ஒத்து…’ கெட்ட ஆட்டம் போட்ட தமிழக வீரர்கள்

2 February 2021, 1:37 pm
Quick Share

சையது முஷ்தாக் அலி தொடரில் இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற, தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக கிரிக்கெட் வீரர்கள், மாஸ்டர் படத்தில் ஹிட் பாடலான, ‘வாத்தி கம்மிங்.. ஒத்து..’ பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சையது முஷ்தாக் அலி டிராபி ‘டுவென்டி – 20’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தொடரில், இந்தியா முழுவதிலும் இருந்து 38 அணிகள் கலந்து கொண்டன. தமிழக அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் போட்டிகளை எதிர் கொண்டது. நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், யார்க்கர் கிங் நடராஜன், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தொடரை எதிர் கொண்டது.

‘‘எலைட் பி‘’ பிரிவில் இடம் பெற்ற தமிழ்நாடு அணி, தான் பங்கேற்ற லீக் சுற்று போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று, தோல்வியை சந்திக்காத அணியாக காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. காலிறுதி போட்டியில் ஹிமாச்சல பிரதேசம் அணியை வென்றதுடன், அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியையும் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி.

பரோடா அணியுடனான பைனலில், டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார் தினேஷ் கார்த்திக். தமிழக அணி வீரர்களின் பவுலிங்கில் திணறிய பரோடா அணி 20 ஓவர் முடிவில் 120/9 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி, நிதானமாக விளையாடி, 18 ஓவரில் 123/3 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டில் வென்றது.

இதன் மூலம் கடந்த முறை நடந்த பைனலில், கர்நாடக அணியுடன் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கப்பை பறிகொடுத்த சோகத்திற்கு மருந்து போட்டுக் கொண்டது. 2007 ஆம் ஆண்டுக்குப்பின் மீண்டும் கோப்பையை வென்ற உற்சாகத்தில் தமிழக வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆமதாபாத் மைதானத்தில் உள்ள வீரர்கள் டிரஸிங் ரூமில், இளைய தளபதி விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘வாத்தி கம்மிங்…ஒத்து’ பாடலுக்கு தினேஷ் கார்த்திக் அதன் சிக்னேச்சர் ஸ்டெப்பை போட, மற்ற வீரர்களும் அவருடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 0

0

0