96 டாக்டர்கள்.. 23 மணி நேர ஆப்பரேஷன்..

5 February 2021, 9:48 pm
Quick Share

கார் விபத்தில், படுகாயம் அடைந்து, முகம், கைகள் சிதைந்த இளைஞருக்கு, 96 டாக்டர்கள் உட்பட 140 மருத்துவ ஊழியர்கள் இணைந்து, 23 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவருக்கு உருவம் கொடுத்து, மறுவாழ்வு அளித்துள்ளனர். டாக்டர்களின் இந்த சாதனையை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.

உலகிலேயே முதல்முறையாக, அமெரிக்காவில், 22 வயது இளைஞர் ஒருவருக்கு, முகம் மற்றும் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஜோ டிமியோ. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது இரவுப் பணியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது, ஜோவின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

கவிழ்ந்த வேகத்தில், கார் தீப்பற்றி எரிய, ஜோ படுகாயம் அடைந்திருக்கிறார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்தில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த ஜோவின், முகம், கைகள் கடுமையாக சிதைந்து போய்விட்டன. 2 மாதம் கோமாவில் இருந்த நிலையில், 20 அறுவை சிகிச்சைகள் செய்து அவரை டாக்டர்கள் காப்பாற்றி இருக்கின்றனர். சிதைந்த அவர் முகத்திற்கு உருவம் கொடுப்பதற்காக, அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம், 12 ஆம் தேதி, முகம் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக் தலைமையில், 96 டாக்டர்கள் உட்பட 140 பேர் கொண்ட மருத்துவ குழுவினர். ஜோவுக்கு சுமார் 23 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் முகம் மற்றும் கைகளை பெற்ற ஜோ, மீண்டும் பழையே நிலைக்கு திரும்பி உள்ளார். 45 நாட்கள் ஐசியுவில் இருந்த அவர், 2 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கண் இமைகளை திறக்கவும், கைகளை பயன்படுத்தவும் பயிற்சி மேற்கொண்டார்.

தனக்கு மறுவாழ்வு அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜோ, ‘பழைய நிலைக்கு நான் திரும்பியது ஆச்சரியம் அளிக்கிறது. இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணருகிறேன்’ என்றார். ஒரே நேரத்தில், இரண்டு கைகள் மற்றும் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்தது உலகில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0