கேமராவை லபக்கிய சிங்கங்கள்! நல்ல வேளை முழுங்கல…

23 January 2021, 5:29 pm
Quick Share

ஜாம்பியாவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட தானியங்கி கேமராவை, தனக்கான இரை என நினைத்த பெண் சிங்கம் ஒன்று, அதனை கடித்து குதறிவிட்டது. பின் அதனை சாப்பிட முடியாது என முடிவு செய்து ஓரமாக போட்டு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள லுவாங்வா தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள, புல்வெளி பகுதியில் சிங்க கூட்டம் ஒன்றை நெருக்கமாக போட்டோ எடுக்க, புகைப்படக்காரர் ஹாரி விளாச்சோஸ் என்பவர் தானியங்கி கேமராவை வைத்திருந்தார். கேமராவை கண்ட ஒரு பெண் சிங்கம், கேமராவை காலால் தட்டியும், கடித்தும் விளையாட துவங்கியது. அதனுடன் சேர்ந்து கொண்ட மற்றொரு சிங்கம், அதனை தனக்கான இரையென நினைத்து அந்த கேமராவை கடித்தது. கடைசியில் அதனை சாப்பிட முடியாது என புரிந்து கொண்ட அந்த சிங்கங்கள் அதனை ஓரத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டன.

இதுகுறித்து ஹாரி கூறுகையில், ‘‘சிங்கங்கள் முதலில் என் கேமராவை தூக்கியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். அது உடைந்தால், பிளாஸ்டிக்கை விழுங்கிவிடுமோ என கவலை உண்டானது. நல்ல வேளை கேமரா உடையவில்லை. பின் கேமராவை ஆய்வு செய்த பார்த்தபோது, எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டானது. சிங்கம் கேமராவை வாயில் வைத்து கடித்த போது, அதன் தொண்டை பகுதி நன்றாக தெரிந்தது. கேமராவை மீட்பதற்காக, அங்கு 30 நிமிடம் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது’’ என்றார்.

அவரது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிங்கத்தின் கூரிய பற்களும், கொடூரமான முகமும் கேமரா முன்பு வரும் போது, அச்சம் வருவதை மறுக்க முடியாது…!

Views: - 3

0

0