நகைகளை விற்று திருநங்கைகளுக்கு வீடு கட்டும் பெண்; ஏன் தெரியுமா?

By: Udayaraman
7 January 2021, 6:27 pm
Quick Share

தங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படும் திருநங்கைகளுக்காக, தன் நகைகள் அனைத்தையும் விற்று, வீடு கட்டித் தரும் உ.பி., பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மூன்றாம் பாலினமாக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வும், கொடுமையான பல வலிகளும், அவமானங்களும் நிறைந்ததாகவே இருக்கும். சிறுவயதிலிருந்தே இந்தச் சமூகம் அவர்களை, தப்பிப் பிறந்த ஜீவன்களாகவே பார்த்துவருகிறது. அவர்கள் பற்றிய சிந்தனை பலருக்கும் வருவதில்லை. பாலினப் பாகுபாடால் அவர்களுக்கு நேரும் இன்னல்களைப் பற்றியும் அதிகம் பேசப்படுவதில்லை.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் திருநங்கைகள் குறித்து 5 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வரும் 50 வயதான அகர்வால் என்ற பெண்மணி, அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ முடிவு செய்து, வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக அவர், தனது நகைகள் அனைத்தையும் விற்றுள்ளார். புலந்த்ஷாஹின் குர்ஜா என்ற நகருக்கு வெளியே, தனது நகைகளை விற்று கிடைத்த பணம் ரூ.2 லட்சம் கொண்டு நிலம் ஒன்று வாங்கி உள்ளார்.

கடந்த புதன்கிழமை வீடு கட்ட அங்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 20 பேர் வரை தங்கும் வகையில் வீடு கட்டப்படும் என அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘திருநங்கைகள் வேலைக்கு செல்வதும், அவர்களுக்கு வீடு கிடைப்பதும் குதிரை கொம்பாக உள்ளது. அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவை தரும் வகையில், சொந்தமாக ஒரு வீடு கிடைப்பது அவசியம் என முடிவு செய்தேன். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவர்களுக்கு வீடு கட்ட முடிவு செய்து, எனது நகைகள் அனைத்தையும் விற்றேன்’’ என்றார்.

தனது இந்த செயல், திருநங்கைகளின் மீதான பார்வையை மாற்ற, சாதகமான அம்சமாக இருக்கும் என அவர் நம்புகிறார். அகர்வால் தனது கணவர், இரண்டு மகன்கள் மற்றும் மாமியாருடன், வாடகை வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது.

Views: - 44

0

0