திரவக் கண்ணாடி கண்டுபிடிச்சுட்டாங்க…! அசத்திய ஆராய்ச்சியாளர்கள்

15 January 2021, 9:12 am
Quick Share

கண்ணாடி தொழில்நுட்பத்திலேயே, திரவ நிலையில் உள்ள கண்ணாடியை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். எப்படி தெரியுமா..

கண்ணாடிகள் கி.மு 1500 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மெசபடோமிய, எகிப்தில் கண்ணாடி பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அப்போது, கண்ணாடி தயாரிப்புக்கு கடும் உழைப்பும், அதிக பணமும் தேவைப்பட்டன. அதனால் கண்ணாடி விலை உயர்வானதாக இருந்தது. அக்காலகட்டத்தில் கண்ணாடி பொருட்களை மன்னர்களும், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அறிவியல் வளர்ச்சிதான் இந்த பாகுபாடுகளை களைந்தது எனலாம். கி.மு. 27 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், ஊதுகுழல் கருவி மூலம் காற்றை ஊதி, திரவத்தை அச்சுகளுக்குள் படியவைக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட பின் தான், கண்ணாடி தயாரிப்பை மிகவும் எளிமையாக்கி, அதன் விலையும் குறைந்து சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

நுாற்றாண்டுகளை கண்டுள்ளது கண்ணாடி தொழில்நுட்பம். இருந்தாலும், அதில் இன்னமும் புதுமைகள் தென்பட்டபடியே இருக்கின்றன. ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘திரவக் கண்ணாடி’ என்ற புதிய பொருள் நிலையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். பொதுவாக வெப்பத்தால் உருகி, திரவ நிலையை அடையும் பொருட்கள், குளிர்ச்சி அடையும் போது, படிப்படியாக மறுபடியும் திட நிலைக்குத் திரும்புகின்றன. அப்படி திரும்புகையில், அந்தப் பொருளில் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த மூலக்கூறுகள், உறைந்து போய் நின்று விட, திட வடிவம் உண்டாகிறது.

ஆனால், திரவக் கண்ணாடியில், மூலக்கூறுகள் முற்றாக உறைந்துவிடாமல், அருகாமையிலுள்ள மூலக்கூறுகளுடன் சற்றே இளக்கமாக இருக்கின்றன. இதனாலேயே அவை திரவ நிலையில் இருப்பது போன்ற தோற்றம் உண்டாகிறது. திரவக் கண்ணாடியின் நடைமுறை பயன்களை கான்ஸ்டான்ஸ் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

Views: - 8

0

0