ஒரு ஊசி மட்டும் ரூ.16 கோடி! விநோத நோயால் வாடும் சிறுமி

6 February 2021, 4:56 pm
Quick Share

முதுகெலும்பு தசைநாற் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாத சிறுமி டீராவின் மீது தான் இப்போது நெட்டிசன்களின் கண்கள் முழுவதும் உள்ளன. மிகவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சிறுமியின் உயிர் காக்க ஊசி ஒன்றை போட வேண்டும். அந்த மருந்தின் ஒரு டோஸ் விலை மட்டும் ரூ.16 கோடி!

மும்பையை சேர்ந்த ஐடி ஊழியர் காமத். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறக்க மகிழ்ச்சியில் திளைத்து போயிருந்தனர். ஆனால் மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. குழந்தைக்கு டீரா என பெயரிட்ட அவர்கள், மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள தயாராயினர்.

இந்த நோய்க்கான மருந்து நோவர்டீஸ் என்ற நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. ஜோல்ஜென்ஸ்மா என்ற அந்த மருந்தின் ஒரு டோஸ் மட்டும் ரூ.16 கோடி. ஆனால் ஒருமுறை மட்டுமே போட்டால் போதும். பக்கவிளைவுகளும் உண்டு. கடந்த ஆண்டு கேரளாவில் உள்ள குழந்தை ஒன்றுக்கு, டாக்டர் ஒருவரின் பெரும் முயற்சியால் இலவசமாக கிடைக்க, அந்த குழந்தை உயிர் பிழைத்தது.

இவர்களுக்கு இலவசம் வாய்ப்பில்லாமல் போக, சமூக வலைதளங்களில் கிரவ்டு பண்டிங் முறையில் பணம் திரட்ட துவங்கினர். அவர்களின் முயற்சி வீண் போகவில்லை. 160 நாட்களுக்குள் 16 கோடி ரூபாய் திரண்டது. ஆனால், டாக்ஸ் மட்டும் ரூ.2 முதல் 5 கோடி வரை கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. இதனையடுத்து, டீராவுக்காக வரிவிலக்கு அளிக்கும்படி, பிரதமர் மற்றும் உத்தவ் தாக்கரேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அவர்களது பெற்றோர்.

இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகள், 6 மாதங்கள் வரை மட்டுமே உயிர் வாழும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 14 ஆம் தேதி வந்தால், டீராவுக்கு 6 மாதம் நிறைவடைகிறது. டீராவுக்கு மருந்து கிடைக்க வேண்டும், அவள் உயிர் பிழைக்க வேண்டும் என நெட்டிசன்கள் வேண்டுகின்றனர். அழகிய அவளது பிஞ்சு முகத்தை காண்கையில், நம் மனதும் கரைகிறது. அவளுக்காக நாமும் பிராத்திப்போம்.. மீண்டு வா டீரா!

Views: - 1

0

0