பஞ்சரான கார் டயருக்கு ஸ்டெப்னி மாட்டிய பெண் கலெக்டர்! நெட்டிசன்கள் பாராட்டு

27 February 2021, 7:32 pm
Quick Share

மைசூர் கலெக்டராக இருக்கும் ரோஹிணி சிந்தூரியின் கார் டயர் பஞ்சராகி விட, யாருடைய உதவியையும் எதிர்பார்க்கமால், தானே கார் டயரை கலட்டி, ஸ்டெப்னி மாற்ற, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பந்தா பரமசிவன்களுக்கு மத்தியில், இப்படியும் ஒரு அதிகாரியா என மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மைசூர் மாவட்ட கலெக்டராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருபவர் ரோஹிணி சிந்தூரி. கட்சி பாகுபாடு பார்க்காமல், தவறு என தெரிந்தால், தட்டி கேட்பதால் மக்கள் மத்தியில் இவருக்கு மாஸ் அதிகம். இந்நிலையில், சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் காரில் வெளியே சென்றிருக்கிறார் ரோஹிணி. அப்போது அவரது கார் நடுவழியில் பஞ்சர் ஆகிவிட்டது. யாரேனும் உதவிக்கு வருவார்களா என எதிர்பார்த்து நிற்காமல், தானே களத்தில் இறங்கி விட்டார் ரோஹிணி.

ஜாக்கி உதவியுடன் காரின் டயரை கழற்றியவர், ஸ்டெப்னியை அவரே மாற்றியிருக்கிறார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், அவர் டயரை மாற்றுவதை தனது மொபைலில் வீடியோ எடுத்திருக்கிறார். பெண் ஒருவர் காருக்கு ஸ்டெப்னி மாற்றுகிறாரே என ஆச்சரியத்தில் வீடியோ எடுத்த நபர், அவரின் அருகில் சென்று விசாரித்திருக்கிறார். தனது மாஸ்க்கை கழற்றிய ரோஹிணி, அவரிடம் பேசியிருக்கிறார். அப்போது தான் கலெக்டரை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார் அந்த பெண்.

நீங்கள் கலெக்டர் தானே என ரோஹிணியிடம் அந்த பெண் விசாரிக்க, சிறு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு சென்றிருக்கிறார் இந்த சிங்கப்பெண்! வீடியோ எடுத்த பெண், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது.

Views: - 14

0

0