இறந்ததாக கருதிய நபர் 45 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் திரும்பிய அதிசயம்: ஆனந்த கண்ணீரில் குடும்பத்தினர்…கேரளாவில் நெகிழ்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
2 August 2021, 11:45 am
Quick Share

கொல்லம்: மும்பையில் 1976ல் நடந்த விமான விபத்தில் பலியானதாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த நபர் 45 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சஜ்ஜத் டங்கல் தன் 25வது வயதில் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடிகை ராணி சந்திரா குழுவுடன் 1976ல் அபுதாபி சென்றார்.அங்கிருந்து குழுவினர் வந்த விமானம் மும்பையில் விபத்தில் சிக்கியதில் நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் இறந்தனர்.

ஒரு சில காரணங்களால் அந்த விமானத்தில் சஜ்ஜத் டங்கல் பயணிக்கவில்லை. தன்னுடன் வந்த குழுவினர் பலியானதால் அதிர்ச்சி அடைந்த அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். பின் மும்பை வந்து சிறு வேலைகளை செய்து வாழ்ந்துள்ளார். விமான விபத்திற்கு பின் சஜ்ஜத் வீடு திரும்பாததால் அவரும் இறந்துவிட்டதாகவே குடும்பத்தினர் கருதினர்.

சஜ்ஜத்தின் உண்மை நிலையை சமீபத்தில் அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவரை குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சேர்த்து வைத்தது. அவரது 91 வயது தாய் பாத்திமா பீவி இறந்ததாக கருதப்பட்ட தன் மகன் 45 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்தபோது கண்ணீர் மல்க வரவேற்றார்.

இறந்துவிட்டார் என கருதிய நபர் உயிருடன் திரும்பியதால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை ஆரத்தழுவினர். அவரது கிராமமே உற்சாகத்தில் மிதந்தது.

Views: - 237

0

0