காலில் கத்தி கட்டிய சேவல் : உரிமையாளருக்கு நேர்ந்த கதி! ஐயோ பாவம்!!

28 February 2021, 1:34 pm
Cock Fight - Updatenews360
Quick Share

சேவல் சண்டைக்காக காலில் கத்தி கட்டிய சேவல், தவறுதலாக அதன் உரிமையாளரையே தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானாவில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் தென் பகுதிகளில், ஜல்லிக்கட்டு, கிடா சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட விளையாட்டுக்கள் மிக பிரபலம் வாய்ந்தது. திருவிழா நாட்களில் நடத்தப்படும் இது போன்ற போட்டிகளுக்கு, பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க, மெரினாவில் திரண்டவர்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் போராட்டம் கொளுந்து விட, முடிவில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால் சேவல் சண்டை மற்றும் கிடா சண்டை உள்ளிட்ட விலங்குகள் மோதலுக்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில்
தெலுங்கானா மாநிலத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சேவல் சண்டையில், தனது சேவல் தாக்கியதில் அதன் உரிமையாளரே பலியாகியிருக்கிறார்.

தெலுங்கானாவிலுள்ள லோத்தன்னூர் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர் சேவல் சண்டையை சட்டவிரோதமாக நடத்தியிருக்கின்றனர். இதில் சேவல்களின் கால்களில் கூரிய கத்தி கட்டப்பட்டிருக்கிறது. அதில் சேவல் ஒன்று, அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்த போது, அதன் உரிமையாளர் அதனை பிடித்திருக்கிறார். பயத்தில் இருந்த அந்த சேவல், உரிமையாளரை தாக்க, காலில் கட்டியிருந்த கத்தி, அவரது இடுப்பில் ஆழமாக வெட்டியிருக்கிறது. இதில் அதிக ரத்தம் வெளியேறி, அவர் உயிரிழந்திருக்கிறார். சேவல் சண்டையை ஏற்பாடு செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

Views: - 13

0

0