தனது எஜமான் மீதான அதீத அன்பை காட்டிய நாய்!

23 January 2021, 6:24 pm
Quick Share

நோய்வாயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது எஜமானருக்காக, 6 நாட்கள் மருத்துவமனையின் வாசலில் அவர் வளர்த்த நாய் காத்திருந்த நெகிழ்ச்சி சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது. இதனை கண்டு நெட்டிசன்கள் உருகி போய் உள்ளனர். தவிர, உலகம் முழுவதும் உள்ள பிரபல தொலைக்காட்சிகள் அனைத்தும் வீடியோவாக வெளியிட, ஓவர் நைட்டில் பிரபலம் ஆகிவிட்டதாம் அந்த நாய்!

துருக்கி நாட்டின் வடகிழக்கில் உள்ள நகரமான டிராப்ஜனில் சிமல் சென்டர்க் (68 வயது) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் போன்கக் என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில், சிமலுக்கு கடந்த 14 தும் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற போதே, அவரது செல்ல நாய், அதன் பின்னாலேயே ஓடியிருக்கிறது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் வாசலிலேயே காத்திருக்க துவங்கியது. ஒன்றல்ல, இரண்டல்ல, அப்படி 6 நாட்கள் மருத்துவமனையில் வாசலிலேயே காத்திருந்திருக்கிறது. சிமலின் மகள் நாயை வீட்டில் கொண்டு சென்று விட்ட போதும், அது மீண்டும், மீண்டும் தனது எஜமானரை காண மருத்துவமனைக்கு ஓடி வந்துவிடுமாம்.

மருத்துவமனை ஊழியர்கள் துரத்திய போதும் அது அங்கிருந்து நகர மறுத்திருக்கிறது. 6 நாட்களுக்கு பின், சிமில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது, தனது வாலை ஆட்டி அன்பை வெளிப்படுத்தியிருக்கிறது. இது குறித்து சிமில் கூறுகையில், ‘‘எங்களுடன் போன்கக் அதிகமாக ஒன்றிவிட்டது. உங்களையும் அது மகிழ்விக்கும்’’ என்றார்.

மருத்துவமனையின் சிஇஓ புவாட் உகுர் கூறுகையில், ‘‘யாருக்கும் எந்த ஆபத்தையும் அது ஏற்படுத்தவில்லை. அனைவரும் அதனால் மகிழ்ச்சியாக இருந்தனர்’’ என்றார். பெற்ற தாய், தந்தையை கவனிக்க நேரமில்லாத இந்த கலியுகத்தில், இந்த வாயில்லா ஜீவன் வெளிப்படுத்திய அன்பு, அதனை ஒரே நாளில் பிரபலமாக்கிவிட்டது.

Views: - 8

0

0