2015ல் நடந்த சம்பவத்துக்காக மரியா ஷரபோவாவிடம் இப்போது மன்னிப்பு கேட்கும் இந்தியர்கள்! எதற்கு தெரியுமா?

5 February 2021, 7:55 pm
Quick Share

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் சச்சின் மீது ஆத்திரம் கொண்ட கேரள நெட்டிசன்கள், சச்சினை யாரென்று தெரியாது என கூறியிருந்த மரியா ஷரபோவா மீது எதிர்வினை புரிந்தததற்காக இப்போது மன்னிப்பு கேட்டு வருகின்றனர்.

ஒரு சின்ன ரீவைண்ட்.. கடந்த 2015 ஆம் ஆண்டில், டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா, சச்சின் தெண்டுல்கரை எனக்கு யாரென்று தெரியாது எனத் தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள், மரியாவின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து அவருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இப்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக சச்சின் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் மீது கோபம் கொண்ட கேரள நெட்டிசன்கள் பலரும், 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்காக, மரியாவிடம் தற்போது மன்னிப்பு கேட்டு வருகின்றனர். மேலும், மரியாவை கேரளா வரும்படி அழைப்பு விடுத்ததுடன், கொரோனா பாதிப்பு குறைந்த பின், திருச்சூர் பூரம் பண்டிக்கைக்கு வாருங்கள் எனவும் அன்புடன் அழைத்துள்ளனர். இதனால் டுவிட்டர் களை கட்டி வருகிறது.

‘ஷரபோவா, நீங்கள் சச்சினைப் பற்றி சரியாகத்தான் கூறியிருக்கிறீர்கள். அவர் தரமான மனிதர் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது’ என கேரள நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். வேறு ஒருவர், ‘மரியா மன்னித்துக் கொள். நீங்கள் பெரிய லெஜண்ட். சச்சினை எங்களுக்கு வீரராகத்தான் தெரியும். ஆனால், ஒரு மனிதராகத் தெரியாது. ஆனால், நீங்கள் சரியாக கணித்தீர்கள். உங்களைத் தவறாகப் பேசியதற்காக மன்னித்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

வேறு ஒருவர், ‘கொரோனா பாதிப்பு குறைந்த பின், கடவுளின் சொந்த தேசமான கேரளாவுக்கு வர வேண்டும்; திருச்சூர் பூரம் பண்டிகையில் கலந்து கொள்ளுங்கள்’ என அழைப்பு விடுத்துள்ளார். மற்றொருவர், ‘ஷரபோவா உங்களுக்கு ஷவர்மாவும், குழிமந்தி பிரியாணியும் தந்து மன்னிப்பு கோருகிறேன். ஒரு லாரி நிறைய மன்னிப்பு ஏற்றி வருகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் தன்னிடம் மன்னிப்பு கேட்பதை அறிந்த ஷரபோவா, ‘ஆண்டுகள் குறித்த குழப்பம் யாருக்காவது வந்துவிட்டதா’ என கேட்டு பதிவிட்டுள்ளார்.

Views: - 0

0

0