வேகம் எடுக்கும் கொரோனா! மீண்டும் வந்து விட்டார் எமதர்ம ராஜா!!

12 April 2021, 6:59 pm
Quick Share

நாடு முழுவதும் கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மொரிதாபாத்தில் எமதர்ம ராஜா வேடமிட்ட கலைஞர் ஒருவர் சாலைகளில் வலம் வந்தார். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக வீசி வருகிறது. பொதுமக்கள் ஏறக்குறைய மாஸ்க் அணிவதையே மறந்து போய் விட்டனர். சமூக இடைவெளி என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் அளவுக்கு மக்களிடையே வைரஸ் குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டிலுள்ள மாநிலங்கள் பலவும், கட்டுப்பாடு விதித்து வருகின்றன. மேலும் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் மொரிதாபாத்தில், பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எமதர்ம ராஜா வேடமிட்ட கலைஞர் ஒருவர் சாலைகளில் வலம் வந்தார். தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த விக்கி என்பவர், எமன் வேடமிட்டு, கையில் பாசக்கயிறு, கடாயுதம் தாங்கி மாஸ்க் அணியாமல் வந்தவர்களை மாஸ்க் அணியும் படி எச்சரிக்கை செய்தபடி வந்தார். மேலும், கொரோனா விழிப்புணர்வு வாசங்களை தாங்கிய மாஸ்க்கை அணிந்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், மொரிதாபாத்தை தொடர்ந்து, இந்தூரிலும், எமதர்ம ராஜா வேடமணிந்த போலீஸ் ஒருவர், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 23

0

0