மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல்: 10 ஆயிரம் அகதிகள் இந்தியா, தாய்லாந்தில் தஞ்சம்..!!

22 June 2021, 8:22 am
Quick Share

நியூயார்க் : மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில் பிப்., 1ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மியான்மர் அதிபர் வின் மைன்ட், அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவித்து மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ராணுவம் இரும்புக் கரமுடன் நசுக்கி வருவதால் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கானோர் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலரின் மியான்மருக்கான துாதர் கிறிஸ்டைன் ஸ்க்ரானர் பர்கனர் கூறியதாவது, மியான்மரில் பதற்ற நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள தயாராகி வருகின்றனர். ஆயுதமேந்திய குழுக்களுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சுயமாக ஆயுதம் தயாரிக்கின்றனர்.

இதுவரை அமைதியாக இருந்த பகுதிகளில் கூட தற்போது பதற்றம் நிலவுகிறது. இதனால், 1.75 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உலக நாடுகள் இணைந்து மியான்மர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். தவறினால், பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 225

0

0