ஈகுவடார் சிறையில் கொடூரமாக மோதிக்கொண்ட கைதிகள்: பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு…!!

Author: Aarthi Sivakumar
30 September 2021, 11:58 am
Quick Share

குயிட்டோ: ஈகுவடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குயாகுவில் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இருதரப்பு கைதிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்து கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மேலும், துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகைளை கொண்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

சிறை காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி கலவரம் வெடித்ததால் ராணுவ வீரர்கள் சிறைக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், போராடி கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக 24 கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பல கைதிகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இதுவரை ஈகுவடார் சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 கைதிகள் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். மேலும் 52க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சில கைதிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Views: - 409

0

0