அமெரிக்க வரலாற்றில் முதல் முறை..! 13 பெண்கள் உட்பட 20 இந்தியர்களுக்கு பிடென் நிர்வாகத்தில் முக்கிய பதவிகள்..!

17 January 2021, 7:26 pm
biden_harris_updatenews360
Quick Share

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் தனது குழுவில், 13 பெண்கள் உட்பட சுமார் 20 இந்திய-அமெரிக்கர்களை தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.

இது அமெரிக்காவின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தை உள்ளடக்கிய இந்திய சமூகத்திற்கான மிகப்பெரும் சாதனையாகும். மேலாண்மை மற்றும் பட்ஜெட் இயக்குநராக பரிந்துரைக்கப்பட்ட நீரா டாண்டன் உட்பட அவர்களில் 17 பேர் சக்திவாய்ந்த வெள்ளை மாளிகை வளாகத்தில் பிடென் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
 
ஜனவரி 20’ஆம் தேதி, 78 வயதான பிடென் அமெரிக்காவின் 46’வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். முதல் முறையாக கமலா ஹாரிஸ் என்ற பெண் நாட்டின் துணை அதிபராக பதவியேற்க உள்ளார். 56 வயதான கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார்.

பதவியேற்புக்கு முன்னர் பல இந்திய-அமெரிக்கர்கள் ஜனாதிபதி நிர்வாகத்திற்குள் நுழைந்ததும் இதுவே முதல் முறையாகும். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிடென், தனது நிர்வாகத்தில் உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்புவதில் இருந்து இன்னும் வெகு தொலைவில் இருக்கிறார்.
 
இந்த பட்டியலில் முதலிடம் வகிப்பது வெள்ளை மாளிகை மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக பரிந்துரைக்கப்பட்ட நீரா டாண்டன் மற்றும் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக பரிந்துரைக்கப்பட்ட டாக்டர் விவேக் மூர்த்தி ஆவர்.
  
வனிதா குப்தா நீதித்துறை இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பிடென் முன்னாள் வெளியுறவு சேவை அதிகாரி உஸ்ரா ஜீயாவை சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை செயலாளராக நியமித்தார்.
 
“பல ஆண்டுகளாக இந்திய-அமெரிக்க சமூகம் பொது சேவைக்கு காட்டியுள்ள அர்ப்பணிப்பு இந்த நிர்வாகத்தின் தொடக்கத்திலேயே பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது! இதில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதில் நான் குறிப்பாக மகிழ்ச்சியடைகிறேன். தேசத்திற்கு சேவை செய்வதில் எங்கள் சமூகம் உண்மையிலேயே உறுதி பூண்டுள்ளது.” என்று இந்தியஸ்போரா நிறுவனர் எம் ஆர் ரங்கசாமி தெரிவித்தார்.
 
வருங்கால முதல் பெண்மணியான பிடென் மனைவியின் கொள்கை இயக்குநராக மாலா அடிகாவும், முதல் பெண்மணியின் அலுவலகத்தின் டிஜிட்டல் இயக்குநராக கரிமா வர்மாவும், சப்ரினா சிங் வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
முதன்முறையாக, பிடென் நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய-அமெரிக்கர்களில் காஷ்மீரைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா ஷா, டிஜிட்டல் வியூகத்தின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் கூட்டு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் முக்கிய பதவியை வகிக்கும் சமீரா பாசிலி வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்சில் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Views: - 0

0

0