பங்களாதேஷில் சரக்கு கப்பலுடன் பயணிகள் படகு மோதி விபத்து..! 27 பேர் பலியான பரிதாபம்..!
5 April 2021, 6:59 pmபங்களாதேஷின் சீதாலக்கியா ஆற்றில் சரக்குக் கப்பல் மீது 50’க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விசைப்படகு மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து தென்கிழக்கில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் நடந்தது.
நேற்று ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் படையினர் இன்று 22 சடலங்களை மீட்டனர் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புக் குழுவில் கடற்படை, கடலோர காவல்படை, தீயணைப்பு சேவை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தனர். மீட்பு நடவடிக்கை முடிந்தது என்று பங்களாதேஷ் உள்நாட்டு நீர் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் கமடோர் கோலம் சாடெக் செய்தியாளர்களிடம் கூறினார்.
எம்.எல். முன்ஷிகஞ்ச் செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. காவல்துறையினரையும் பார்வையாளர்களையும் மேற்கோள் காட்டி, டாக்கா ட்ரிப்யூன், விபத்தை ஏற்படுத்திய பின்னர் சரக்குக் கப்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அறிவித்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாராயங்கஞ்ச் துணை ஆணையர் மொஸ்டைன் பில்லா தெரிவித்தார். அடக்கம் செய்யும் பணிக்காக இறந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாவட்ட நிர்வாகம் 25,000 டாக்கா (296 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க விசாரணைக் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து விசாரிக்க உள்நாட்டு நீர் போக்குவரத்து ஆணையம் நான்கு பேர் கொண்ட குழுவை தனியாக அமைத்துள்ளது.
0
0