தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
1 July 2021, 11:03 pm
Quick Share

தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 7 வயது சிறுவனை அவனது மாமா கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஜூடோ பயிற்சியளிக்கும் மையத்துக்கு அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்த 60 வயதான ஜூடோ பயிற்சியாளர் சக மாணவர் ஒருவரை வைத்து அந்த சிறுவனுக்கு ஜூடோ பயிற்சி அளித்தார். அப்போது அந்த மாணவர் சிறுவனை பல முறை தரையில் தூக்கி வீசினார்.‌ இதில் சிறுவன் வலி தாங்க முடியாமல் தரையில் கிடந்து அலறிய போதும், அந்த பயிற்சியாளர், மீண்டும் எழுந்து நின்று பயிற்சியை தொடரும்படி சிறுவனை வற்புறுத்தியதாக தெரிகிறது.

சிறுவன் அழுதுகொண்டே தனது பயிற்சியை தொடர அந்த மாணவர் மீண்டும் மீண்டும் அவனை தரையில் தூக்கி வீசினார். இப்படி 27 முறை தரையில் தூக்கி வீசியதில் சிறுவன் நிலைக்குலைந்து சுயநினைவை இழந்தான்.‌ ஆனாலும் அந்த பயிற்சியாளர் அதனை நம்பாமல் சிறுவன் நடிப்பதாக அவன் மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து சிறுவனின் மாமா அவனை பரிசோதித்தபோது அவன் உண்மையிலேயே சுயநினைவை இழந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவன் கோமா நிலைக்கு சென்றான். இதனையடுத்து உயிர்காக்கும் கருவியுடன் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Views: - 210

0

0