விமானத்தில் தொங்கியபடி பயணித்த ஆப்கனியர்கள் : நடுவானில் இருந்து விழுந்து 3 பேர் பலி..!!

Author: Babu Lakshmanan
16 August 2021, 5:08 pm
AFghan flight - - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், விமானத்தில் தொடங்கியபடி சென்ற 3 பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து 3 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் புகுந்தது. தலிபான்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் பணத்தை வாரி இரைத்தது. 2011ம் ஆண்டு 1,10,000 துருப்புகள் வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா களமிறக்கியிருந்தது. பின்னர் படிப்படியாக, தங்கள் நாட்டு துருப்புகளை அமெரிக்கா குறைத்தது.

குறிப்பாக, செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படைகளையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இதனைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகரங்களாக தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

இதனிடையே, காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், அலைமோதும் கூட்டத்தினால், விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆப்கன் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ், பிரிட்டீஸ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன.

மேலும், அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் என்ற பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றியுள்ளனர். அதேவேளையில், இடைக்கால ஆப்கன் அதிபராக தலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கன் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், உயிர் பலி அச்சத்தால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்காக, ஆப்கன் நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். மேலும், ஓடும் விமானத்தின் வெளிப்பகுதியில் தொங்கியபடி மக்கள் பயணம் செய்ய முயன்று வருகின்றனர்.

அப்படி, அமெரிக்காவுக்கு சொந்தமான ஜம்போ விமானத்தின் வெளியே அமர்ந்தபடி, சிலர் பயணித்துள்ளனர். ஓடுபாதையை விட்டு சிறிது தூரம் சென்ற உடனே மேலே இருந்து காகிதம் போல 3 பேர் கீழே விழுந்தனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

தலிபான்களினால் உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்து, எப்படியாவது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று இதுபோன்ற ஆபத்தான பயணத்தை பொதுமக்கள் மேற்கொண்டு உயிரை விடுவது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

Views: - 418

0

0