ஆப்கனில் ஐபிஎல்லுக்கு NO.. கிரிக்கெட் விளையாட மட்டுமல்ல பார்க்கவும் தடை : சொன்ன காரணம்தா..?

Author: Babu Lakshmanan
21 September 2021, 5:43 pm
ipl - afghanistan - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்களின் இடைக்கால அரசை ஏற்க விரும்பாத உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டவர் வரை, படிப்படியாக அண்டை நாடுகளுக்கும், சொந்த நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனிடையே, யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தலிபான்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும், 1996 – 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல தற்போதைய தலிபான் அரசு இருக்காது என்றும், பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகளில் ஆண்கள், பெண்கள் பார்க்க முடியாதவாறு திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் மாறுபட்டதாகவே காணப்பட்டது.

பெண்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்காக, தலிபான்கள் தரப்பில் ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டது. அதாவது, விளையாட்டு போட்டிகளில் பெண்கள் பங்கேற்பது தேவையில்லாத ஒன்று. குறிப்பாக, கிரிக்கெட் விளையாடும் பெண்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய அரசு, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காது. இப்போதுள்ள சூழலில் பெண்கள் எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆப்கனில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச கல்வியாளர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விளையாட்டு, கல்வி என அடுத்தடுத்த துறைகளில் கெடுபிடிகளை விதித்து வரும் தலிபான்கள் அரசு, தொலைக்காட்சியை பார்ப்பதிலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, இந்தியாவின் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் வர்ணனையாளர்களும், பெண் பார்வையாளர்களுடம் மைதானத்தில் இருப்பதால், இதனை தடை செய்வதாக அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான்களால், உலக நாடுகளிடம் இருந்து ஆப்கானிஸ்தான் தனிமைப்படுத்தப்படுவதாக பொதுவான கருத்து எழுந்துள்ளது.

Views: - 352

0

0