ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக முதல் போராட்டம் : ஆயுதங்களுக்கு மத்தியில் துணிந்த பெண்கள்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
18 August 2021, 1:22 pm
taliban - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அங்கு முதல் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்திறுப்பது உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால் அங்கிருந்து வெளியேற பலரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே, அங்குள்ள அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விட்டதாகக் கூறிய தலிபான்கள், தலைநகர் காபூலில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். ஏதேனும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால், அதனை பறிமுதல் செய்வதற்காகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து போராடாமல், அண்டை நாடுகளிடம் தஞ்சம் புகுவது அல்லது தலிபான்களிடமே தஞ்சம் புகுவது என அந்நாட்டு ராணுவ வீரர்கள் புறமுதுகை காட்டி ஓடி விட்டனர்.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது, படிப்பு, அரசியல், வேலைகள் என எந்த உரிமைகளையும் பெண்களிடம் இருந்து பறிக்கக் கூடாது என வலியுறுத்தி தலைநகர் காபூலில் 4 பெண்கள் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கர ஆயுதங்களை கையில் ஏந்திய தலிபான்கள் அவர்களை சுற்றி சுற்றி வந்தனர்.

தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களே ஓடி ஒளிந்து வரும் நிலையில், அவர்களை எதிர்த்து தைரியமாக பெண்கள் போராடிய நிகழ்வு உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Views: - 395

2

0