இந்திய செய்தி சேனல்களுக்கான தடை நீக்கம்..! அடி பணிந்தது நேபாளம்..?

3 August 2020, 10:12 pm
Sharma_Oli_UpdateNews360
Quick Share

இந்திய செய்தி சேனல்களை ஒளிபரப்ப நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த தடை முடிவுக்கு வந்துள்ளது. நேபாள அரசாங்கம் நேற்று தடையை நீக்கி, இந்திய செய்தி சேனல்களை ஒளிபரப்பத் தொடங்கியது.

நேபாளத்தின் டிஷ் ஹோம் நிர்வாக இயக்குனர் சுந்தீப் ஆச்சார்யா ஒரு அறிக்கையில், நேபாளம் இப்போது இந்திய செய்தி சேனல்களின் ஒளிபரப்பை மீண்டும் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 10’ம் தேதி நேபாளம் சில இந்திய செய்தி சேனல்களை நேபாளத்தின் இறையாண்மைக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகக் கூறி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மாதம், நேபாள அரசாங்கம் இது தொடர்பாக இந்தியாவுக்கு ஒரு கடிதம் எழுதியது. இது நேபாள தலைமைக்கு எதிராக போலியான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக இந்திய அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.