மண்டியிட்டும் மயங்காத சவூதி..! மீண்டும் சீனாவிடமே சரணாகதி..! பரிதவிப்பில் பாகிஸ்தான்..?

20 August 2020, 4:54 pm
Imran_Qureshi_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் நீண்டகால நட்பு நாடான சீனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் இம்ரான் கான் அடிக்கோடிட்டுக் காட்டிய சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி தனது சீன சகாக்களுடன் மூலோபாய நிலை கலந்துரையாடல்களுக்காக இன்று சீனாவுக்கு புறப்படுகிறார்.

குரேஷியுடன் வெளியுறவு செயலாளர் சோஹைல் மஹ்மூத் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழுவும் செல்லும் எனக் கூறப்படுகிறது.

குரேஷி சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யியை சந்திக்க உள்ளார். நிகழ்ச்சி நிரலில், சீனா மற்றும் பாகிஸ்தானில் கட்டமைக்கப்பட்டு வரும் பெல்ட் மற்றும் சாலை திட்டங்கள், இருதரப்பு உறவுகள் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பாகிஸ்தான் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குரேஷி காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவையும், கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா நிலைப்பாட்டையும் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் சீனாவுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் இம்ரான் கான் அடிக்கோடிட்டுக் காட்டியபோது, ​​ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், சவூதி அரேபியாவுடனான உறவு முறிவு பற்றிய அறிக்கைகள் ஆதாரமற்றவை என்று வலியுறுத்தினார்.

சீனாவைப் பற்றி பிரதமர் கான் கூறுகையில், பாகிஸ்தான் சீனாவுடனான உறவை வலுப்படுத்துகிறது. மேலும் “எங்கள் எதிர்காலம் சீனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பரஸ்பர நட்பு மிகவும் தேவை.” என்று அவர் கூறினார்.

“சீனா எங்கள் ஒரே நண்பர். இது நல்ல மற்றும் கெட்ட காலங்களில் பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாக உறுதியுடன் இருந்து வருகிறது” என்று பிரதமர் கான் கூறினார்.

முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு பாகிஸ்தானின் திட்டத்திற்கு ஆதரவளிக்காததால் கடுப்பில் இருந்த சமயத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சவூதி குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சவூதி அரச குடும்பம் கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனை உடனடியாக செலுத்த உத்தரவிட்டதுடன், கடனாக என்னை வழங்கப்படாது எனவும் கடுமை காட்டியது. இந்நிலையில் சவூதியின் கோபத்தை தணிக்க பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா இந்த வாரம் சவூதி அரேபியாவுக்கு விரைவாக விஜயம் செய்தார்.

ஆனால் சவூதி அரேபியாவில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் ராணுவத் தளபதியை கண்டுகொள்ளவில்லை. இதனால் பாகிஸ்தான் கடுமையான சிக்கலில் உள்ளது. சவூதி எந்த சலனமும் காட்டாததால், அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் அடைக்கலம் புகுவதாக கூறப்படுகிறது.

Views: - 35

0

0