ஆப்கனில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள் மீட்பு: விமானப்படையின் சி -130 ஜே விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது!!
Author: Aarthi Sivakumar21 August 2021, 12:25 pm
புதுடெல்லி: இந்திய விமானப்படையின் சி -130 ஜே விமானம் காபூலில் சிக்கி இருந்த 85க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. தாயகம் திரும்புவது மற்றும் இதர உதவிகளுக்காக அந்த சிறப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது.
மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட தொலைபேசி எண்களுடன் கூடுதலாக தொலைபேசி எண்களையும், வாட்ஸ்அப் எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, காபூல் நகரில் உள்ள காலிஜா என்ற திருமண மண்டபத்தில் சுமார் 200 இந்தியர்கள் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது இந்திய விமானப்படையின் சி -130 ஜே விமானம் 85 க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் காபூலில் இருந்து புறப்பட்டது. விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தஜிகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. 85க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். விமானம் இன்று நண்பகல் இந்தியா வந்தடைகிறது .காபூலில் உள்ள இந்திய மக்களை வெளியேற்ற இந்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
0
0