“எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை:..! முழு அளவிலான போருக்குத் தயாராகும் முன்னாள் சோவியத் நாடுகள்.!

30 September 2020, 7:34 pm
Armenia_Updatenews360
Quick Share

ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் பேச்சுவார்த்தைகளுக்கான சர்வதேச அழைப்புகளை நிராகரித்துள்ளன. மேலும் சர்ச்சைக்குரிய நாகோர்னி கராபாக் பகுதியை குறிவைத்து கடுமையான மோதல்கள் இன்று நான்காவது நாளாக நீடித்து வருகிறது.

1990’களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அஜர்பைஜானிலிருந்து பிரிந்து ஆர்மீனியாவின் மாகாணமான நாகோர்னி கராபாக் மீது ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகள் பல ஆண்டுகளாக கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளன.

இரு தரப்பினரும் கடும் மோதலில் ஈடுபட்டு வன்முறை வெடித்ததற்கு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி கடந்த ஞாற்றுக்கிழமை முழுமையான சண்டைக்கு வழிவகுத்தனர்.

கிட்டத்தட்ட 100 பேர் இந்த மோதலில் இரு தரப்பிலும் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இரு தரப்பிலும் ராணுவத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜர்பைஜான் எந்த இராணுவ மரணங்களையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் அஜர்பெய்ஜானின் தெற்கு பெய்லாகன் பிராந்தியத்தில் ஒரு ஏ.எஃப்.பி பத்திரிகையாளர், மோதல்களில் கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் சவப்பெட்டியைக் கண்டு டஜன் கணக்கான பெண்கள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்.

இதற்கிடையே யுத்த நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஏனெனில் மோதல் ஒரு பேரழிவுகரமான முழுமையான போராக விரிவடைந்து துருக்கி, ரஷ்யா போன்ற பிராந்திய சக்திகளை ஈர்க்கக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

துருக்கிய ஜெட் விமானங்கள் தங்கள் எல்லையில் ஆத்திரமூட்டும் வகையில் விமானங்களை இயக்குவதாகவும், ஆர்மீனியா வான்வெளியில் அத்துமீறுவதாகவும் இன்று ஆர்மீனிய தலைநகரான யெரெவனில் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

ரஷ்யாவுடனான இராணுவ ஒப்பந்தம்
ஆர்மீனியாவுடன் இராணுவ உடன்படிக்கை கொண்ட ரஷ்யா அஜர்பைஜானுடம் நல்ல உறவை கொண்டிருப்பதால், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருமாறு பலமுறை அழைப்பு விடுத்ததுடன், பேச்சுவார்த்தைகளுக்கும் உதவ முன்வந்தது.

ஆனால் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பஷினியன் அஜர்பைஜானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று கூறினார்.

“ஒரு கடுமையான மோதல் நிலவும் சூழ்நிலையில் ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் ரஷ்யா இடையே ஒரு உச்சிமாநாட்டைப் பற்றி பேசுவது மிகவும் பொருத்தமானதல்ல” என்று பஷினியன் கூறினார். பேச்சுவார்த்தைகளுக்கு பொருத்தமான சூழ்நிலை மற்றும் நிலைமைகள் அமைய வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

ஆர்மீனியா உட்பட பல முன்னாள் சோவியத் குடியரசுகளை உள்ளடக்கிய கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பான ரஷ்யா தலைமையிலான இராணுவ கூட்டணியால் மோதலில் தலையிடுவது குறித்து கேட்க ஆர்மீனியாவிடம் இந்த கட்டத்தில் எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.

இதற்கிடையே அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவும் நேற்று ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பேச்சுவார்த்தைகளை நிராகரித்தார்.

தொடரும் கடும் சண்டை

அஜர்பைஜான் தனது இராணுவ உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் ஆர்மீனிய தரப்பு 81 இறப்புகளை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. மொத்தம் 17 பொதுமக்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று கடுமையான சண்டை தொடர்கிறது என்று கூறியது. போர் வெடித்ததில் இருந்து அதன் படைகள் 2,300 கராபாக் பிரிவினைவாத துருப்புக்களைக் கொன்றதாகக் கூறியது.

அதன் துருப்புக்கள் “130 டாங்கிகள், 200 பீரங்கிகள், 25 விமான எதிர்ப்பு பிரிவுகள், ஐந்து வெடிமருந்து கிடங்குகள், 50 பீரங்கி கவச வாகனங்கள், 55 இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

கராபக்கின் பிரிவினைவாதப் படைகள் பொதுமக்கள் உள்கட்டமைப்பைக் குறிவைத்து டெர்ட்டர் நகரத்தின் மீது குண்டுகளை வீசியுள்ளன என்று அது மேலும் கூறியது.

அஜர்பைஜானின் நீண்டகால நட்பு நாடான துருக்கி, கூலிப்படையினர் உட்பட நேரடி இராணுவ ஆதரவை அஜர்பெய்ஜானுக்கு அளிப்பதாக ஆர்மீனியா குற்றம் சுமத்தியுள்ளது .

பெரிய அளவிலான போர் வெடிக்குமா?

“ஒரு பெரிய அளவிலான போரைப் பார்ப்பதற்கு நெருக்கமாக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது ஒரு பிராந்திய அளவிலான போராகக் கூட மாறலாம்” என்று சர்வதேச நெருக்கடி குழுவின் ஒலேஸ்ய வர்தன்யன் கூறினார்.

“வெகுஜன பொதுமக்கள் உயிரிழப்புகளை கண்டால் எந்தவொரு பிராந்திய சக்திக்கும், அது ரஷ்யா அல்லது துருக்கி எதுவாக இருந்தாலும், இதில் தலையிட மிகவும் வலுவான சாக்குப்போக்காக இருக்கும்.” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே ஆர்மீனியா மற்றும் கராபாக் ஞாயிற்றுக்கிழமை இராணுவச் சட்டம் அறிவித்து இராணுவ அணிதிரட்டலை தொடங்கியுள்ளன. மறுபுறம் அஜர்பைஜான் இராணுவ ஆட்சியையும் பெரிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவையும் விதித்துள்ளது. 

இதனால் இரு நாடுகளும் பெரிய அளவிலான போருக்கு தயாராவது வெளிப்படையாக தெரிகிறது. இதற்குள் உலக நாடுகள் தலையிட்டு சமாதானத்தை முன்னெடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 14

0

0