உக்ரைனை உலுக்கும் போர்…குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல்: சர்வதேச தலைவர்கள் கண்டனம்..!!

Author: Rajesh
10 March 2022, 12:38 pm
Quick Share

கீவ்: உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்த நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 15வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மக்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.

இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த சம்பவத்தில் 17 பேர் காயம் அடைந்தனர்.

இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மருத்துவமனையின் இடிபாடுகளுக்குள் மக்கள், குழந்தைகள் உள்ளனர். இது அக்கிரமம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

காட்டுமிராண்டித்தனம் என வெள்ளை மாளிகையும், சீரழிவு என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் சாடி உள்ளனர். சுகாதார மையம் ஒரு போதும் தாக்குதலுக்கு இலக்காக கூடாது என ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Views: - 1165

0

0