ஆர்மீனியப் படைகளிடமிருந்து கிராமத்தைக் கைப்பற்றியது அஜர்பைஜான்..! நீண்ட கால போரை நோக்கிச் செல்லும் மோதல்..!

By: Sekar
4 October 2020, 6:10 pm
armenia_azerbaijan_updatenews360
Quick Share

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடும் நாகோர்னோ-கராபாக் மீதான மோதலில் கடுமையான சண்டை தொடர்கிறது என்றும், அஜர்பைஜான் ஜனாதிபதி நேற்று தனது படையினர் ஒரு கிராமத்தை கைப்பற்றியதாகவும் கூறினார்.

செப்டம்பர் 27’ஆம் தேதி தொடங்கிய சண்டை நாகோர்னோ-கராபாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை 1994’ல் இருந்து அஜர்பைஜானில் உள்ளூர் இன ஆர்மீனியப் படைகளின் கட்டுப்பாட்டில் விட்டுச் சென்ற ஒரு போரின் முடிவிற்குப் [பிறகு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது.

ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷுஷன் ஸ்டெபனியன் நேற்று முழு முன் வரிசையில் தீவிர சண்டை நடைபெறுகிறது என்றும், ஆர்மீனிய படைகள் மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறினார்.

அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் எந்த விமானங்களும் சுடப்படவில்லை என மறுத்து, ஆர்மீனிய வீரர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசியதாகக் கூறினார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தனது நாட்டின் இராணுவம் மடகிஸ் கிராமத்தைக் கைப்பற்றி வெற்றிக்கொடியை ஏந்தியுள்ளது என்றார்.

இதுவரை தங்கள் பக்கத்தில் இருந்த 150’க்கும் மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நாகோர்னோ-கராபாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஜர்பைஜான் அதிகாரிகள் தங்கள் இராணுவ விபத்துக்கள் குறித்த விவரங்களை வழங்கவில்லை.

நாகோர்னோ-கராபாக் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் வஹ்ரம் போகோஸ்யன் நேற்று பேஸ்புக்கில், இந்த சண்டையில் சுமார் 3,000 அஜர்பைஜானியர்கள் இறந்துவிட்டதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் இதனால் தான் அந்நாடு விவரங்களை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

நாகோர்னோ-கராபாக் சோவியத் காலத்தில் அஜர்பைஜானுக்குள் இருந்த ஒரு தன்னாட்சி பகுதியாகும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், 1991’ல் அது அஜர்பைஜானிலிருந்து சுதந்திரம் பெற்றது. இதையடுத்து 1992’இல் வெடித்த ஒரு முழு அளவிலான போர் 30,000 மக்களைக் கொன்றது.

1994’ல் போர் முடிவடைந்த நேரத்தில், ஆர்மீனியப் படைகள் நாகோர்னோ-கராபக்கை மட்டுமல்லாமல், மடகிஸ் உள்ளிட்ட பிராந்தியத்தின் முறையான எல்லைகளுக்கு வெளியே கணிசமான பகுதிகளையும் தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இந்நிலையில் அஜர்பைஜான் தனக்குச் சொந்தமான கிராமத்தை மீண்டும் கைப்பற்றியதாகக் கூறியுள்ளது.

Views: - 59

0

0