தம்பியின் உயிரை காத்த சிறுமி.. துருக்கி நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பாசம் : வைரலாகும் வீடியோ… சிலாகித்து போன மக்கள்!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 1:42 pm
Quick Share

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய போதும், தனது தம்பியின் உயிரை காப்பாற்ற போராடிய சிறுமியின் செயல் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி 6ம் தேதி அதிகாலையில் துருக்கி, சிரியா நாடுகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நில அதிர்வினால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு நடுவே அடிக்கடி துருக்கியில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் பீதியுடனே வசித்து வருகின்றனர்.

இருநாடுகளில் மரண ஓலம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், சகோதரன் மற்றும் சகோதரி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலக மக்களை நெகிழச் செய்து வருகிறது. அதிலும், தனது சகோதரனை காப்பாற்றும் விதமாக, இடிபாடுகளுக்கு நடுவிலும் தனது கையை, சகோதரனின் தலையில் வைத்தபடி, சிறுமி உயிருக்கு போராடியது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கச் செய்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு 17 மணிநேரம் கழித்து அவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அதுவரையில் தம்பியின் உயிரை காப்பாற்ற சிறுமி போராடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 236

0

0