கொரோனா காலத்தில் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்த இந்தியா..! புகழாரம் சூட்டிய கனடா..!

5 November 2020, 5:49 pm
Justin_Trudeau_Canada_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான மருந்துகளின் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா வகிக்கும் முக்கியமான பங்கை குறிப்பிட்டு கனடா அரசு இந்தியாவை பாராட்டியுள்ளது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின், முதல் முறையாக கனடா தலைமையிலான மந்திரி ஒருங்கிணைப்புக் குழுவில் (எம்.சி.ஜி.சி) இந்தியா இணைந்தவுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் இதைத் தெரிவித்தார்.

நாட்டின் வெளியுறவு அமைச்சகமான குளோபல் விவகாரங்கள் கனடா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், எம்.சி.ஜி.சி’யில் இந்தியாவின் பங்களிப்பை ஷாம்பெயின் வரவேற்றுள்ளார் என்றும், இந்தியாவில் சமீபத்திய முன்னேற்றங்களைக் குறிப்பிட்டு, உலகளாவிய கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் இந்தியா வகிக்கும் முக்கிய பங்கை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்களின் போது இந்தியா வகித்த பங்கு, நெருக்கடிகளின் போது மருத்துவப் பொருட்களை எவ்வாறு நம்பியிருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மே மாதம், இந்தியா கனடாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சரக்குகளை அனுப்பியது. அப்போது மொத்தம் ஐந்து மில்லியன் மாத்திரைகள் கனடாவுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒருங்கிணைப்புக்கான எம்.சி.ஜி.சி அமைப்பின் மெய்நிகர் உரையாடலின் 11’வது கூட்டத்தில் பங்கேற்ற மற்ற நாடுகள் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் பிரிட்டனாகும்.

கூட்டத்தில் அமைச்சர்கள் வெற்றிகரமான கொரோனா தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 19

0

0