பதவியிலிருந்து வெளியேறியவுடன் பொருளாதாரத் தடை..! டிரம்ப் அரசின் நிர்வாகிகளை திருப்பி அடித்த சீனா..!

21 January 2021, 12:57 pm
mike_pompeo_updatenews360
Quick Share

டிரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரிகள் நேற்று பதவியில் இருந்து விலகிய உடனே சீனா அவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

புதிதாக ஜோ பிடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே வெளியிடப்பட்ட அறிக்கையில், டிரம்பின் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் மற்றும் அமெரிக்காவிற்கான ஐ.நா தூதர் கெல்லி கிராஃப்ட் ஆகியோருக்கு பயண தடை மற்றும் வணிக கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது.

பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட மற்றவர்களில் டிரம்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவரோவும் அடங்குவார். மேலும் ஆசியாவிற்கான அவரது உயர் தூதர் டேவிட் ஸ்டில்வெல், சுகாதார மற்றும் மனித சேவை செயலாளர் அலெக்ஸ் அசார், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மற்றும் மூலோபாயவாதி ஸ்டீபன் பானன் ஆகியோருக்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத் தடைகள் பெரும்பாலும் ஒரு அடையாள நடவடிக்கையாக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது விரோதமாகக் கருதப்படும் ஒரு அமெரிக்க நிர்வாகத்திற்கு சீனாவின் விரோதப் போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

“கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள சில சீன எதிர்ப்பு அரசியல்வாதிகள், தங்கள் சுயநல அரசியல் நலன்களிலிருந்தும், சீனாவுக்கு எதிரான தப்பெண்ணம் மற்றும் வெறுப்பிலிருந்தும், சீன மற்றும் அமெரிக்க மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், சீனாவின் உள் விவகாரங்களில் கடுமையாக தலையிட்டனர்.” என சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக செவ்வாயன்று, பாம்பியோ முஸ்லீம் இன சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் அடக்குமுறையை இனப்படுகொலை என்று அறிவித்தார். இது சீன அதிகாரிகளுக்கு எதிரான புதிய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கான கதவைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0