அம்மாடியோவ்..! சீனாவின் முதல் கொரோனா தடுப்பூசி இவ்ளோ விலையா..?
19 August 2020, 11:40 amகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையிலும், கொடிய தொற்றுநோய்க்கு உலகம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மருந்தை எப்போது பெறும் என்ற கேள்வி இன்னும் எஞ்சியுள்ளது.
முன்னதாக ரஷ்யா தனது முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி’யை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அறிவித்தாலும் உலக நாடுகள் சந்தேகத்துடவே பார்க்கின்றன.
இந்நிலையில் சீன அரசுக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியான Ad5-nCoV என்ற மறுசீரமைப்பு அடினோவைரஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்படுவதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியூ ஜிங்சென், “அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்கப்படும். இந்த தடுப்பூசியை நாட்டில் உள்ள அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் இரண்டு முறை தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளேன். இது வரை எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை.
முதல் முறை இந்த தடுப்பூசியை போட்டவுடன் 97 சதவீத நோயெதிர்ப்பு கிடைத்து விடும். பின்னர் 28 நாட்கள் கழித்து இரண்டாவது முறை மீண்டும் தடுப்பூசியை செலுத்தும் போது முழு நோயெதிர்ப்பு கிடைக்கும். சிலசமயம் தேவை ஏற்படின், ஒரே சமயத்தில் இந்த மருந்து செலுத்திக்கொள்ளலாம்.
இரண்டும் சேர்த்து இந்த மருந்து 1000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 10,800 ரூபாய்) விலையில் விற்கப்படும். அனைத்து நடைமுறைகளையும் முடித்து இந்த இறுதிக்குள் சந்தைக்குள் வந்துவிடும்.” எனக் கூறியுள்ளார்.