இரண்டு ஆண்டுகளுக்குள் 4 கனடியர்களுக்கு தூக்கு..! போதைப்பொருள் கடத்தலைக் காரணம் காட்டி சீனா அதிரடி..!

7 August 2020, 2:36 pm
canada_china_death_sentence_updatenews360
Quick Share

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நான்காவது கனேடிய குடிமகனுக்கு சீனா மரண தண்டனை விதித்துள்ளது.

யே ஜியான்ஹுயிக்கு தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஃபோஷன் நகராட்சி இடைநிலை நீதிமன்றம் இன்று தண்டனை விதித்தது. சட்டவிரோத போதைப்பொருட்களை தயாரித்து கடத்திச் சென்றதில் குற்றவாளி என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மற்றொரு சந்தேக நபருக்கு மரண தண்டனையும் மேலும் 4 பேருக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைகள் தானாகவே சீனாவின் உச்ச நீதிமன்றத்திற்கு பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் கனடா, ஹவாய் நிறுவனரின் மகளான மெங் வான்ஷோவை வான்கூவர் விமான நிலையத்தில் கைது செய்தது தொடர்பாக மோதல் உருவானது. அவரது கைது சீனாவை கோபப்படுத்தியது. இது உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் நடவடிக்கை என்று சீனா கருதுகிறது.

இந்நிலையில் குவாண்டோங் மாகாணத்தில் உள்ள குவாங்சோ நகராட்சி இடைநிலை நீதிமன்றத்தால், சக கனேடியரான சூ வீஹோங்கிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட ஒரு நாள் கழித்து யேவின் தண்டனை குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

முன்னதாக கனேடிய போதைப்பொருள் கடத்தல்காரன் ராபர்ட் ஷெல்லன்பெர்க் மெங் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டார். மேலும் ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பங்கு வகித்ததற்காக ஃபேன் வீ என அடையாளம் காணப்பட்ட கனேடிய குடிமகனுக்கு ஏப்ரல் 2019’இல் மரண தண்டனை வழங்கப்பட்டது.

மெங் கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், கனடாவின் முன்னாள் இராஜதந்திரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் கனேடிய தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவர் ஆகியோரையும் சீனா தடுத்து வைத்தது. மெங்கை விடுவிக்க சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாக, கனோலா விதை எண்ணெய் உட்பட சீனாவிற்கு செல்லும் பல்வேறு கனேடிய ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அறிக்கை யே மற்றும் பிறருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக விவரங்களை வழங்கவில்லை. எனினும், அண்டை மாகாணமான குவாங்சோவை தளமாகக் கொண்ட யாங்செங் ஈவினிங் நியூஸின் வலைத்தளம், யே மற்றும் லு ஹன்ச்சாங் ஆகியோர் மே 2015 முதல் ஜனவரி 2016 வரை போதைப் பொருளை உற்பத்தி செய்து கொண்டு செல்ல மற்றவர்களுடன் சதி செய்ததாகக் கூறியுள்ளது.

பல ஆசிய நாடுகளைப் போலவே சீனாவும் போதைப்பொருள் தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் கடுமையான தண்டனைகளை அளிக்கிறது. மேலும் நாட்டின் அதிகரித்து வரும் செல்வமும் உலக வர்த்தகத்திற்கான மையமாக மாற்றப்படுவதும் சட்டவிரோதப் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தையில் வளர்ந்து வரும் வெளிநாட்டினரை ஈர்த்துள்ளது.

2009 டிசம்பரில், பாகிஸ்தான்-பிரிட்டிஷ் தொழிலதிபர் அக்மல் ஷேக் ஹெராயின் கடத்தல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தினால் மன்னிப்பு கோரினார்.

மற்ற எல்லா நாடுகளையும் விட சீனா ஒவ்வொரு ஆண்டும் அதிகமான குற்றவாளிகளை தூக்கிலிடும் என்று நம்பப்படுகிறது. உண்மையான எண்ணிக்கை ரகசியம் என்றாலும், மதிப்பீடுகள் அதை சுமார் 2,000’ஆகக் குறிப்பிடுகிறது.

சூ’வின் தண்டனை குறித்து நேற்று கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இந்த விவகாரம் சீன சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். “இந்த வழக்கு சீனா-கனடா உறவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது” என்று வாங் கூறினார்.