ஆன்லைனில் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த சீன பெண்! கிடைத்ததோ ஆப்பிள் ஜூஸ்!!

3 March 2021, 8:13 am
Quick Share

பெண் ஒருவர் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐபோன் 12’ போனை, ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்டர் செய்திருந்த நிலையில், ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து புகார் அளித்து, ஐபோனுக்காக காத்திருக்கிறார். இந்த வினோத சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

சீனாவை சேர்ந்த லியூ என்ற பெண் ஒருவர், ஆன்லைனில், ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் போனை, ஆர்டர் செய்திருக்கிறார். இதற்காக 1,500 டாலரை செலுத்திவிட்டு, தனது புது போனுக்காக காத்திருந்திருக்கிறார். குறிப்பிட்ட நாளில், அவருக்கு ஐபோன் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் டெலிவர் செய்யப்பட்ட ஐபோன் பாக்ஸை திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஐபோன் பாக்ஸ் உள்ளே, ஆப்பிள் சுவை கொண்ட கூல்டிரிங்ஸ் தான் இருந்திருக்கிறது. இதனால் அவர் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கியிருக்கிறார்.

பொதுவாக ஈபே அல்லது அமேசான் போன்ற மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து ஆர்டர் பெறும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அடிக்கடி நடக்கிறது. ஆனால், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நேரடியாக ஆர்டர் செய்து, இப்படி ஐபோனுக்கு பதிலாக ஜூஸை டெலிவரி பெற்றிருப்பதாக அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தின் வீடியோவை, சீன சமூக ஊடக தளமான வெய்போவில் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனையடுத்து ஆப்பிள் மற்றும், எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளன. இப்போதைக்கு திருட்டு எங்கு நடந்திருக்கும் என தெளிவாக தெரியவில்லை. சிலர் லியு ஆப்பிள் என நம்பி போலி வலைதளத்தில் ஆர்டர் செய்திருக்கலாம் என தெரிவித்திருக்கின்றனர்.

Views: - 3

0

0