அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு: இந்தியா அன்பளிப்பாக கொடுத்த சிலை சேதம்..!!

30 January 2021, 5:14 pm
gandhi - updatenews360
Quick Share

வாஷிங்டன்: கலிபோர்னியாவில் உள்ள மகாத்மா காந்தியின் உலோக சிலை மர்மநபர்களால் சேதப் படுத்தப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மத்திய பூங்கா டேவிஸ் நகரின் ஓர் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இங்கு அனுதினமும் காலை, மாலை வேளைகளில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வர். மகாத்மா காந்தியின் நினைவாக இங்கு இந்த பூங்காவில் ஆறு அடி உயரம், 294 கிலோ எடை கொண்ட பிரான்ஸ் உலோக சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் அடையாளமாக திகழும் காந்திசிலை மர்ம நபர்கள் சிலரால் சில இடங்களில் சேதமாக்கப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா என்ற கோணத்தில் கலிபோர்னியா மாகாண காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது அமெரிக்காவில் தலைவர்கள் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது வாடிக்கையாகி வருகிறது. பூங்காவின் ஊழியர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு போலீசாரிடம் தகவல் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த சிலை தற்காலிகமாக பூங்காவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சேதமான இடங்களை மீண்டும் சரிசெய்து இந்த சிலை மீண்டும் பூங்காவில் நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசு கலிபோர்னியா மாகாண அரசுக்கு இந்த சிலையை பரிசு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காந்தி சிலையை பூங்காவில் நிறுவ காந்திக்கு எதிரான சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பையும் மீறி இந்த சிலை அப்போது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மர்மநபர்களை கண்டறிந்து தண்டனை அளிக்கப்படும் என அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது.

Views: - 22

0

0