சீனாவுக்கு ஆதரவா ரொம்பத்தான் பண்றீங்க..! உலக சுகாதார நிறுவனம் குறித்து டொனால்ட் டிரம்ப்..!

26 March 2020, 5:12 pm
Donald_TrumP_UpdateNews360
Quick Share

வாஷிங்டன் : உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக சீனாவுக்கு மிகவும் சார்பாக உள்ளதாக கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்தில் பலர் இதனால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இது மிகவும் நியாயமற்றது என்று அவர்கள் கருதுவதாகவும் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜனாதிபதி டிரம்ப் இவ்வாறு கூறினார்.

செனட்டின் வெளியுறவுக் குழுவின் உறுப்பினரான மைக்கேல் மெக்கால், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் நடந்து கொண்ட விதத்தால், கொரோனா பாதிப்பு தீர்ந்தவுடன் அமெரிக்கா சுகாதார நிறுவனத்துடனான அதன் உறவை மீண்டும் ஆராய வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டீர்களா என்று ஜனாதிபதி டிரம்பிடம் கேட்கப்பட்டது.

“இது மிகவும் நியாயமற்றது என்ற பேச்சு நிச்சயமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் நியாயமற்றது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்” என்று ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஊதுகுழலாக இருந்து வருவதாக செனட்டர் கிரெக் ஸ்டீப் ஒரு ட்வீட்டில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனா இரண்டும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். செனட்டர் ஜோஷ் ஹவ்லி திரு ஸ்டீப்பின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

“இங்கே விளைவுகள் இருக்க வேண்டும். இந்த தொற்றுநோய்களில் உலகிற்கு எதிராக சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் உலக சுகாதாரரா அமைப்பு பக்கபலமாக உள்ளது” என்று அவர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவன இயக்குனர் கெப்ரேயஸ் சீனாவின் தலைமையை புதிய கொரோனா வைரஸ் பாதிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உறுதியை பாராட்டியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்.