இப்படி ஒரு மெனு கார்டை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா யுவர் ஆனர்!

17 January 2021, 11:10 am
Quick Share

சீன உணவகம் ஒன்று, அதன் மெனு கார்டில், மிகவும் நேர்மையாக மெனு குறித்து விளக்கம் அளித்ததை நெட்டிசன்கள் லைரல் ஆக்கி உள்ளனர். உணவகத்தில் தயாராகும் சிங்கப்பூர் நூடுல்ஸ் குறித்து சுயவிமர்சனம் செய்துள்ள அந்த உணவகம், ‘இது அவ்வளவு சுவையாக இருக்காது’ என மெனு கார்டில் குறிப்பிட்டு, ஆச்சரியம் அளிக்கின்றனர்.

கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரியல் நகரில் இருக்கும் சீன உணவகம் ‘ஆன்ட் தெய்’. இது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இவ்வாறு தங்கள் மெனு கார்டினை தயார் செய்துள்ளனர். வித்தியாசமான விளம்பரங்கள் தான் மக்களை கவர்ந்து இழுக்கும் என்பது தான் உண்மையும் கூட. அந்த வழியை தான் இந்த உணவகமும் பின்பற்றி இருக்கிறது.

இந்த உணவகத்தின் மெனு கார்டை தனது டுவிட்டரில், கிம் பிளேயர் என்பவர் பகிர்ந்துள்ளார். அதில், ‘நகரில் எனக்கு பிடித்த உணவகம் ஆன்ட் தெய். உணவின் சுவை மற்றும் நேர்மையான மெனு கார்டால் எனக்கு பிடித்துள்ளது’ எனவும் பதிவிட்டுள்ளார். கியூமின் பீப் என்ற உணவின் மெனுவில், ‘கண்டிப்பாக முயற்சிக்கலாம்’ என குறிப்பிட்டுள்ள உணவக உரிமையாளர், ஆரஞ்ச் பீப் உணவை ‘இதன் சுவை நன்றாக இருக்காது’ என குறிப்பிட்டுள்ளார்.

சாடே சாஸ் குறித்த மெனுவில், ‘இதனை நீங்கள் முயற்சிக்காமல் இருப்பது நல்லது’ என கூறியதுடன், தங்கள் உணவகத்தில் சாப்பிட நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால், நேரம் அதிகம் செலவாகும் என கூறி சிரிப்பை வரவழைத்து உள்ளார்.

பன்றி இறைச்சி குறித்த மெனுவில், ‘நேர்மையாக கூற வேண்டும் என்றால் நான் இதற்கு ரசிகன் இல்லை’ எனவும், சிங்கப்பூர் நூடுல்ஸ் குறித்த மெனுவில், ‘இது மிகவும் சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்; ஆனால் இது ஒரு பாதுகாப்பான தேர்வு’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உணவக உரிமையாளரான ஃபைகாங் ஃபீ கூறுகையில், ‘நாங்கள் மெனுவில் நிறைய பாரம்பரிய உணவுகளை வைத்திருந்தோம். ஆனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பியதை ஆர்டர் செய்வார்கள். அது அவர்களுக்கு திருப்தி அளிக்காமல், மிச்சம் வைத்துவிடுவார்கள். அவர்கள் விரக்தி அடைவதை கண்ட நான், மெனு குறித்து சுயவிமர்சனம் எழுத துவங்கினேன். சில உணவுகளுக்கு மட்டும் எழுதி இருந்தநிலையில், வாடிக்கையாளர்களிடம் அது அதிக வரவேற்பு பெற, எல்லா உணவுக்கும் எழுதி மெனுவில் சேர்த்தோம்’ என்று கூறினார்.

Views: - 5

0

0