தென்னாப்பிரிக்காவை தவிக்கவிடும் கனமழை…வெள்ளப்பெருக்கில் சிக்கி 443 பேர் பலி: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..!!
Author: Aarthi Sivakumar18 April 2022, 4:06 pm
கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 443 ஆக உயர்வடைந்து உள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கனமழையால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள், மின் கம்பங்கள் மற்றும் பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.
கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதுபற்றி மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறும்போது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு உதவியாக செயல்பட மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று சாலைகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் மற்றும் மின்வசதி உள்ளிட்ட பாதிப்படைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார். எனினும், வருகிற நாட்களில் மாகாணத்தின் சில பகுதிகளில் கூடுதலான மழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதன்படி, நேற்று மதியத்தில் இருந்து கடற்கரை பகுதியில் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்று வேகமுடன் வீசியது. தொடர்ந்து, பரவலாக பல பகுதிகளில் கனமழையும் பெய்தது. அந்நாட்டின் தென்கிழக்கே அமைந்த குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்து உள்ளது.
இன்னும் 63 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என மாகாண முதலமைச்சர் சிலே ஜிகாலாலா கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் எதிரொலியாக 500 பள்ளி கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. 100 பள்ளி கூடங்கள் வரை சேதமடைந்து உள்ளன என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்து உள்ளது.
0
0