50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தகவல் திருட்டு..? நெட்டிசன்கள் அதிர்ச்சி..!
4 April 2021, 2:33 pm50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் விவரங்கள் ஹேக்கர்களுக்கான இணையதளத்தில் கிடைப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த தகவல் பல ஆண்டுகள் பழமையானதாகத் தோன்றுவதாக சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களால் சேகரிக்கப்பட்ட பரந்த அளவிலான தகவல்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்படுகிறது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
ஹேக்கர் தளத்தில் கிடைக்கும் 50 கோடி பேஸ்புக் பயனர்களின் தரவுகள் குறித்து முதலில் ஒரு வணிக ஊடகத்தால் தெரிவிக்கப்பட்டது. அந்த வெளியீட்டின் படி, தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட 106 நாடுகளைச் சேர்ந்த பயனர்களின் தகவல்கள் இதில் உள்ளன.
பேஸ்புக் பல ஆண்டுகளாக தரவு பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அரசியல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா 87 மில்லியன் பேஸ்புக் பயனர்கள் பற்றிய தகவல்களை தங்கள் அனுமதியின்றி அணுகியதாக 2018’ஆம் ஆண்டு வெளியான ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தொலைபேசி எண் வழியாக ஒருவருக்கொருவர் தேட அனுமதித்த ஒரு அம்சத்தை முடக்கியது.
டிசம்பர் 2019’இல், ஒரு உக்ரேனிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் 267 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் தனித்துவமான பயனர் ஐடிகளுடன் ஒரு தரவுத்தளத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். கிட்டத்தட்ட இதில் கிடைத்த அனைத்து தகவல்களும் யு.எஸ் அடிப்படையிலான பயனர்களுடையது. தற்போதைய தரவு இந்த தரவுத்தளத்துடன் தொடர்புடையதா என்பது தெளிவாக இல்லை.
“இது பழைய தரவு, இது முன்னர் 2019’இல் தெரிவிக்கப்பட்டது” என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த மென்லோ பார்க் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “ஆகஸ்ட் 2019’இல் இந்த சிக்கலை நாங்கள் கண்டறிந்து சரிசெய்தோம்.” என அது மேலும் தெரிவித்துள்ளது. எனினும் இதில் தொடர்ந்து மர்மங்கள் நீடிக்கின்றன.
1
0