பிரெஞ்சு அதிபர் மீதான இம்ரான் கான் விமர்சனத்தால் பாகிஸ்தான் போர் விமானங்களை மேம்படுத்த பிரான்ஸ் மறுப்பு..!

20 November 2020, 5:16 pm
Imran_Khan_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் தனது மிராஜ் போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அகோஸ்டா 90 பி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் உதவ மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் மீது கடும் விமர்சனம் வைத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரான்சின் ரபேல் ஜெட் விமானம் ராணுவ ரீதியாக முன்னிலையில் உள்ள நிலையில், அதன் தொழில்நுட்ப தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிடக்கூடும் என்ற கவலையில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை விமானத்துடன் பணிபுரிய அனுமதிக்க வேண்டாம் என்று ரபேல் விமானங்களை வாங்கிய நாடுகளில் ஒன்றான கத்தாருக்கு பிரான்ஸ் கூறியுள்ளது. பாகிஸ்தான் கடந்த காலங்களில் சீனாவுடன் முக்கிய பாதுகாப்பு தரவுகளை பகிர்ந்து கொண்டதால் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ பத்திரிகையின் முன்னாள் பாரிஸ் அலுவலகத்திற்கு வெளியே நடந்த மோதல் இரு நாடுகளுக்கிடையேயான உறவை சிக்கலாக்கியுள்ளது. கடந்த செப்டம்பரில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 18 வயதான அலி ஹசன், பத்திரிகையின் முந்தைய அலுவலகத்திற்கு வெளியே இரண்டு நபர்களைக் குத்தினார். பாகிஸ்தானில் வசிக்கும் அவரது தந்தை, பின்னர் ஒரு உள்ளூர் செய்தி சேனலிடம் தனது மகன் ஒரு பெரிய வேலை செய்துள்ளார் என்றும், தாக்குதல் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

பின்னர் பிரெஞ்சு ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மெக்ரன் மீதான இம்ரான் கானின் தொடர் விமர்சனம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மோசமாக்கி விட்டது.

இந்நிலையில் மிராஜ் 3 மற்றும் மிராஜ் 5 போர் விமானங்களை மேம்படுத்த உதவ வேண்டாம் என்ற பிரெஞ்சு அரசாங்கத்தின் முடிவு, பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த சுமார் 150 மிராஜ் போர் விமானங்களைக் கொண்ட பாகிஸ்தான் விமானப்படையை கடுமையாக பாதிக்கும். அவற்றில் பாதி மட்டுமே தற்போது சேவையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் விமானப்படையின் நிலையை இது சிக்கலில் தள்ளியுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் அகோஸ்டா 90 பி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்தும் பாகிஸ்தானின் கோரிக்கையும் பிரான்சால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் விமானப்படை மற்றும் கப்பற்படைகளின் நிலைமை மோசமாகும் சூழலில் உள்ளது.

Views: - 25

0

0