இந்தியாவுக்கு பின்னடைவு: மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

13 July 2021, 11:56 pm
Quick Share

உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற மெகுல் சோக்சிக்கு டொமினிக்கா ஐகோர்ட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாமீன் தொகையாக இந்திய மதிப்பில் ரூ 2.75 லட்சத்தைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயை கடனாக பெற்றார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கின் விசாரணையின் போதே மெகுல் சோக்சி, கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, தப்பி ஓடிவிட்டார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர், கடந்த மே மாதம் ஆன்டிகுவாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது டொமினிக்கா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை அந்த நாட்டிலிருந்து நேரடியாக நாடு கடத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது.

மெகுல் சோக்சியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் டொமினிகா நாட்டிலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. இந்நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மெகுல் சோக்சி ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த டொமினிக்கா ஐகோர்ட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.விஜய் அகர்வால் மேலும் கூறுகையில், “டொமினிக்கா ஐகோர்ட்டு கடைசியாக நீதியை நிலைநாட்டும் வகை யில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவரின் சொந்த விருப்பப்படி மருத்துவச் சிகிச்சை பெறுவது அடிப்படை சட்ட உரிமை” என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் இனி மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டிற்குச் சென்று சிகிச்சை பெறலாம். அதேநேரம் சிகிச்சை முடிந்த பிறகு டொமினிகா திரும்ப வேண்டும் என்றும் சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டொமினிக்கா தீவில் இருந்த சோக்சி கடந்த 26-ந் தேதி அதிரடியாக இன்டர்போல் போலீசால் கைது செய்யப்பட்டார். அவர் டொமினிகாவில் போலீஸ் காவலில் உள்ளார். ஜாமீன் தொகையாக இந்திய மதிப்பில் ரூ 2.75 லட்சத்தைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அதிகாரிகளே மெகுல் சோக்சியை சட்டவிரோதமாக கடத்தியதாக அவரது வழக்கறிஞர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 180

0

0